சரிந்த பிரதமர் மோடியின் “புகழ்”.. இந்திய அளவில் கூட ஓகே.. பீகாரில் படுமோசம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் புகழ் இந்திய அளவிலும், பீகார் மாநில அளவிலும் கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்து இருக்கிறது.
டெல்லியை சேர்ந்த வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் (Centre for the Study of Developing Societies - CSDS) என்ற நிறுவனம் இந்திய அரசியல் தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் புகழ், தேர்தல் கருத்துக்கணிப்புகள், சமூக பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் புகழ் மதிப்பீடு குறித்தும் CSDS நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2019 க்கு பிறகு ஓராண்டு ஆண்டு இடைவெளி கழித்து 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வை இந்த நிறுவனம் நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
மக்களிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டு இந்த ஆய்வு முடிவை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2022 வரை பிரதமர் நரேந்திர மோடிக்கு இருந்த புகழ் சதவீதத்தை சிஎஸ்டிஎஸ் நிறுவனத்தின் இணை இயக்குநரும் பேராசிரியரும், அரசியல் திறனாய்வாளருமான சஞ்சய் குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

2014 ல் உயர்ந்த புகழ்
அதில், கடந்த 2013 ஆம் ஆண்டு, அதாவது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு அவரது புகழ் சதவீதம் 19 சதவீதமாக இருந்தது. நரேந்திர மோடி தேர்தலில் வென்று முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற 2014 ஆம் ஆண்டு அவரது புகழ் சதவீதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 36% ஆக அதிகரித்தது.

2018-ல் சரிவு
அதன் தொடர்ச்சியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் சதவீதம் 48% ஆக அதிகரித்தது. ஆனால், 2018 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் 37 சதவீதமாக சரிந்தது. ரபேல் ஊழல் புகார், வங்கிக்கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பெரும் பணக்காரர்கள், பெட்ரோல், டீசல் விலையேற்றம், விவசாயிகள் போராட்டம் போன்ற பல காரணங்களால் புகழ் வீழ்ச்சியடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புகழ் சரிவு
அடுத்து பிரதமர் நரேந்திர மோடி 2 வது முறையாக தேர்தலில் வெற்றிபெற்ற 2019 ஆம் ஆண்டு அவரது புகழ் சதவீதம் 47% ஆக அதிகரித்தது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி, தேர்தல் வெற்றி போன்றவை இதற்கு காரணமாக கூறப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த முடிவுகள் வெளியாகாத நிலையில் 2021 ஆம் ஆண்டு அவரது புகழ் 44% ஆக சரிந்து இருப்பதாக சிஎஸ்டிஎஸ் தெரிவித்துள்ளது.

காரணம்
ஜிஎஸ்டி வரி உயர்வு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், விவசாயிகள் போராட்டம், சாதி, மதவாத மோதல்கள், மத கலவரங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இது சரிவடைந்து இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் சிறிய சரிவை சந்தித்தாலும், தற்போது பாஜக ஆட்சி கவிழ்ந்துள்ள பீகார் மாநிலத்தில் 11% புகழ் பிரதமர் மோடிக்கு குறைந்து இருக்கிறது.

பீகார்
கடந்த 2013 ஆம் ஆண்டு பீகாரில் அவருக்கு 23% புகழ் இருந்தது. 2014-ல் அது 44% சதவீதமாக அதிகரித்தது. பீகாரில் ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு நிதீஷ் குமாருடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியமைத்த 2017 ஆம் ஆண்டு மோடியின் புகழ் 56% ஆக அதிகரித்தது. அடுத்து 2018 ல் இதில் 48% ஆக குறைந்து 2019-ல் மீண்டும் 64% ஆக உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் இதில் 53% ஆக சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications