மோடி 3.0 ..அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு! கூட்டணி கட்சிகளுக்கு என்ன துறைகள்? குமாராசாமிக்கு லக்
டெல்லி: பாஜக அமைச்சரவையில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியைச் சேர்ந்த ஜிதன்ராம் மஞ்சிக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு பெரும் தொழிற்சாலைகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் மக்களவைத் தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்றது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அடித்துக் கூறிய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 293 தொகுதிகளில் வென்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களமிறங்கிய இந்தியா கூட்டணி கடும் போட்டி அளித்த நிலையில் சுமார் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தனி பெரும்பான்மை இல்லாத போதிலும் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தார். நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டது.
குறிப்பாக பாஜக மூத்த தலைவர்களும் ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களோடு கட்சியின் தேசிய தலைவரான ஜே பி நட்டா உள்ளிட்ட 71 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
கூட்டணி ஆட்சி என்பதால் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), சிவசேனா, அப்னா தளம், இந்திய குடியரசு கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளுக்கு என 11 அமைச்சர் பதவிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் மாலை 7:15 மணிக்கு நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிலையில் பாஜக அமைச்சரவையில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியைச் சேர்ந்த ஜிதன்ராம் மஞ்சிக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பஞ்சாயத்து ராஜ் , மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சராக , ஜேடியூ எம்பியும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் நெருங்கியவருமான லலன் சிங் என அழைக்கப்படும் ராஜீவ் ராஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். லோக் ஜன் சக்தியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளத்தின் எம்.பி.யான ஜெயந்த் சவுத்ரிக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.பி.யான எச்.டி.குமாரசாமிக்கு எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications