30 ஆண்டு பாஜக கோட்டை உடைந்தது.. பிரசாந்த் கிஷோர் வெற்றி ஏன் முக்கியம்! உணர்த்தும் 3 முக்கிய பாடங்கள்
டெல்லி: இப்போது 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும் சூழலில் அதில் பீகாரின் பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் அவர் வென்றுள்ள சூழலில், இது தேசிய அரசியலில் கவனிக்கப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. கடந்தாண்டு நடந்த பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த இடைத்தேர்தல் அக்கட்சிக்கு முக்கியமானதாக இருந்தது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
கடந்தாண்டு பீகாில் நடந்த தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. அந்தத் தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி தனித்து போட்டியிட்ட போதிலும் எந்தவொரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. இது பிரசாந்த் கிஷோருக்கு மிக பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால், ஒரேயாண்டில் இப்போது அங்கு களம் மாறியுள்ளது.

இடைத்தேர்தல்
பீகாரில் பங்கிபூர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், பாஜக வேட்பாளரையே பின்னுக்கு தள்ளி பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 18,900 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பங்கிபூர் தொகுதி என்பது சாதாரண தொகுதி அல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இது பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வந்தது.
இப்போது பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் நிதின் நபின், அவருக்கு முன்பு அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹா ஆகியோர் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி பெற்று இருந்தனர்.. அதாவது இந்த தொகுதி முன்பு பாட்னா மேற்கு தொகுதியாக இருந்த நிலையில், அப்போது 1995ல் பாஜக இங்கு முதலில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக நடந்த எல்லா தேர்தல்களிலும் பாஜகவே வென்றுள்ளது.
பாஜகவின் கோட்டை
அப்படி பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையில் தான் இப்போது பிரசாந்த் கிஷோர் வெற்றி வாகையை சூடி இருக்கிறார். இது பாஜகவின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட மாற்றத்தையே காட்டுகிறது. மேலும், பிரசாந்த் கிஷோர் வெற்றி அவரது அரசியல் மைலேஜ்ஜையும் உயர்த்துகிறது.
இந்த வெற்றி பிரசாந்த் கிஷோரின் அரசியல் வாழ்க்கைக்கும் மிக பெரிய திருப்புமுனையாகும். பல ஆண்டுகளாக நரேந்திர மோடி, ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களின் தேர்தல் வெற்றிகளுக்கு பின்னால் இருந்த தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் அறியப்பட்டார். மற்ற தலைவர்கள் வெற்றிக்கு உதவுவது சரி, ஆனால், இவரால் மக்கள் ஆதரவை பெற முடியுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. அந்த கேள்விக்கான பதிலாகவே பங்கிபூர் இடைத்தேர்தல் இருக்கிறது..
பாடம் 1- ஜன் சுராஜ்
இந்த வெற்றி ஜன் சுராஜ் கட்சிக்கும் மிக பெரிய பூஸ்ட்டாக இருக்கும். கடந்தாண்டு நடந்த பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் இந்த ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அவர்களால் முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றியை பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். குறைந்தபட்சம் ஓரிரு தொகுதியை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. மொத்தமாகவே 3% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இதனால் அப்போதே ஜன சுராஜின் எதிர்காலம் குறித்து சந்தேகங்கள் எழுந்தன. தேர்தலுக்கு பிறகு பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியதும் பிரசாந்த் கிஷோருக்கு பின்னடைவாக அமைந்தது. ஆனால், இந்த இடைத்தேர்தல் அக்கட்சி பெற்றுள்ள வெற்றி தொண்டர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இனி பீகாரில் பாஜக- ஆர்ஜேடி என்ற இருமுனை போட்டிக்கு மாற்றாக ஜன சுராஜ் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பாடம் 2- ஆர்ஜேடி
இந்த முடிவு ஆர்ஜேடிக்கும் மிக பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்த முக்கிய இடத்தில் ஆர்ஜேடி இருந்தது. ஆனால், பிரசாந்த் கிஷோர் இப்படி வலுவான மாற்று அரசியல் சக்தியாக உருவெடுப்பது ஆர்ஜேடிக்கு சிக்கலை தரும். குறிப்பாக இளைஞர்கள், நகர்ப்புற நடுத்தர மக்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் ஜன சுராஜ் பக்கம் திரும்பக்கூடும். அது ஆர்ஜேடி அரசியலுக்கு புதிய சவாலாக அமையும்.
பாடம் 3- பாஜக
பாஜகவுக்கும் இந்த முடிவு மிக பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.. சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள், வினாத்தாள் லீக் விவகாரம், வேலைவாய்ப்பு பிரச்சினைகள், இளைஞர்களின் அதிருப்தி போன்றவை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றன. மேலும், அம்மாநில முதல்வராக பாஜகவின் சம்ராட் சவுத்ரி பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் முக்கிய தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தல் முக்கியமானதாக கருதப்பட்டது. ஆனாலும், இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது!


Click it and Unblock the Notifications
