2 வாரங்களில் 41 நேர்காணல்கள்.. டிவி சேனலை ஆன் செய்தாலே மோடி முகம்தான்.. பலே பாஜக
டெல்லி: லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் நேர்காணல்கள் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து தற்போது வரை சுமார் 41 நேர்காணல்களை மோடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக 49 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் நேர்காணல்கள் பேசுபொருளாகியுள்ளன. எந்த செய்தி சேனலை ஓபன் செய்தாலும், அதில் மோடியின் இன்டர்வியூதான் கண்ணில் படுகிறது. கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியிலிருந்து மே 14ம் தேதி வரை, அதாவது வாரணாசி தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தது தொடங்கி தற்போது வரை சுமார் 41 நேர்காணல்களை கொடுத்திருக்கிறார்.
எனவேதான் மோடி பேசுபொருளாக மாறியிருக்கிறார். பேட்டி கொடுக்க பயந்தவர், செய்தியாளர்களை சந்திக்க ஓட்டம் பிடிப்பவர் என்றெல்லாம் விமர்சித்திருந்த காங்கிரஸ், தற்போது மோடியின் வியூகத்தால், இந்த விஷயத்தில் பின்தங்கி விட்டது.
ராஜஸ்தான் பத்ரிகா, நியூஸ் வீக், ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூஸ்18 இந்தியா, தி அஸ்ஸாம் ட்ரிப்யூன், தந்தி டிவி, ஏஎன்ஐ, திவ்ய பாஸ்கர் (குஜராத்தி செய்தி ஊடகம்), டைம்ஸ் நவ், ஹிந்தி நாளிதழ், அமர் உஜாலா, ஹிந்துஸ்தான், ஆனந்தபஜார் பத்ரிகா (பெங்காலி நாளிதழ்), அகிலா நியூஸ், குஜராத் சமாச்சார், பூல்சாப், சந்தேஷ், குட்ச்மித்ரா, ஜென்மபூமி மற்றும் பூல்சாப், TV9 நெட்வொர்க், ஏசியாநெட் சுவர்ணா, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆஜ் தக், இந்தியா டிவி, டைனிக் ஜாக்ரன், சாகல், ரிபப்ளிக் டிவி ஆகிய செய்தி ஊடகங்களுக்கு பிரதமர் நேர்காணல் கொடுத்திருந்தார்.
இதில் அவர் பேசிய விஷங்கள் பெரும் கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்த மோடி, ஊடுருவல்காரர்கள் மற்றும் அதிக குழந்தைகளை பெறுபவர்கள் என இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். இது இரண்டும் இஸ்லாமியர்களை குறிப்பிடும் விதமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை குவித்திருந்தன.
இப்படி இருக்கையில், இந்த சம்பவம் நடந்து 24 நாட்கள் கழித்து அவர் நியூஸ் 18 இந்தியாவுக்கு அளித்த நேர்காணலில் இது தொடர்பான கேள்விகளை எதிர்கொண்டார். செய்தியாளர் ரூபிகா லியாகத் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது,
"அதிக குழந்தைகளை பெறுபவர்கள் என்றுதான் நான் கூறியிருந்தேன். ஆனால் அதை ஏன் இஸ்லாமியர்களுடன் ஒப்பிடுகிறீர்கள். இங்குள்ள அனைத்து ஏழை குடும்பங்களின் நிலையும் இதுதான். சமூகத்தில் எங்கெல்லாம் ஏழ்மை இருக்கிறதோ அங்கெல்லாம் அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள்" என்று கூறினார். உடனே செய்தியாளர் குறிக்கிட்டு, மற்ற சமூகத்தினரை விட இஸ்லாமியர்களுக்கு அதிக குழந்தைகள் உள்ளனர் என்று நீங்கள் கூறவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு, "நான் இந்துக்கள் என்றோ, முஸ்லிம்கள் என்றோ கூறவில்லை" என மோடி பதிலளித்திருந்தார். இதற்கடுத்து, ஊடுருவல்காரர்கள் என மோடி பேசியது குறித்து அவரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.
தேர்தல் பத்திரம், அக்னிபாத், சீனாவுடன் எல்லை பதற்றம், மணிப்பூர் கலவரம், ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை மிக முக்கிய பிரச்னைகளாக இருக்கும் நிலையில் இது குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
ரேவண்ணா விவகாரம் குறித்து 3 நேர்காணல்களில் மட்டுமே கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. தேர்தல் பத்திரம் குறித்து தந்தி டிவி, ஏஎன்ஐ, ராஜஸ்தான் பத்ரிகா மற்றும் திவ்யா பாஸ்கர்(குஜராத்தி ஊடகம்) ஆகியவற்றில் மட்டும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. தி அஸ்ஸாம் ட்ரிப்யூன் செய்தி ஊடகத்தின் நேர்காணலில் மணிப்பூர் கலவரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
இந்தி செய்தி ஊடகமான அமர் உஜாலா மற்றும் ஹிந்துஸ்தான் ஆகியவை அக்னிபாத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பெங்காலி நாளிதழான ஆனந்தபஜார் பத்ரிகாவின் நேர்காணலில் மோடியில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இதில் சில கேள்விகளுக்கு மோடி அளித்திருந்த பதில் உண்மையா?(fact check) என்று கண்டறியப்படவில்லை. குறிப்பாக பொதுச் செல்வங்களை மறுபங்கீடு செய்வது பற்றி பிரதமர் பேசியது உண்மைக்கு மாறானது என செய்தி ஊடகங்கள் fact check செய்யவில்லை.
இதைவிட உச்சம் என்னவெனில், மோடியை நேர்காணல் செய்த 41 செய்தி ஊடகங்களில் ஒரே ஒரு செய்தி ஊடகம் கூட கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு எதிர்கொண்டது குறித்தும், இந்து, இஸ்லாமியர்கள் கலவரம் குறித்தும் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications