90 மணி நேரம்.. 10,800 கி.மீ பயணம்! தேர்தல் பரப்புரை, நலத்திட்டங்கள்.. பிரதமர் மோடியின் புதிய வேகம்!
திப்ர மோட்சா+சிபிஎம் கூட்டணி திரிபுராவில் பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருவதால் பாஜக இம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
டெல்லி: திரிபுராவில் தேர்தல் பிரசாரம், பெங்களுரில் சர்வதேச விமான கண்காட்சி அதன் பின்னர் மும்பை பெருமாநகராட்சி தேர்தல் பிரசாரம் என 90 மணி நேரங்களில் சுமார் 10,800 கி.மீ தொலைவு பயணித்து கடந்து பணியாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
வடகிழக்கு மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக திரிபுரா மாநிலத்தில் வரும் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றது. ஆனால் ஏற்கெனவே ஆட்சியிலிருந்து சிபிஎம் கட்சிக்கும் பாஜகவுக்கும் வெறும் ஒரு சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் இருந்தது.
குறிப்பிட்ட 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருக்கும் தோல்வியடைந்த சிபிஎம் வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 1000க்கும் குறைவாக இருந்தது. அதேபோல 29 தொகுதிகளில் இந்த வித்தியாசம் 5000க்கும் குறைவாக இருந்தது. எனவே இந்த முறையும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் திப்ர மோட்சா+சிபிஎம் கூட்டணி பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறது.

பிரசாரம்
எனவே பிரதமர் மோடி இம்மாநிலத்தில் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதுமட்டுமல்லாது மும்பை பெருமாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே டெல்லியை கைநழுவ விட்டதை போல மும்பையையும் கைநழுவ விடக்கூடாது என்று பாஜக திட்டமிட்டுள்ளது. ஆக தேர்தல் பிரசாரம், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல் என கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 6,450 கி.மீ வரை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10ம் தேதி டெல்லியிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவுக்கு சென்றார். அங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து மேற்கில் உள்ள மும்பைக்கு சென்று 2 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார்.

தொடர் பயணம்
பின்னர் அங்கிருந்து 1500 கி.மீ தொலைவில் உள்ள டெல்லிக்கு வந்து அல்ஜாமியா-துஸ்-சாய்பியா அரபி அகாடமியில் கட்டப்பட்டுள்ள புதிய வளாக கட்டிடங்களை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் 2,500 தொலைவு உள்ள திரிபுரா மாநிலத்திற்கு சென்று அம்பாசா, ராதாகிஷோர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர் மீண்டும் டெல்லி திரும்பினார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடைபெற்ற மகரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அடிக்கல்
அதன் பின்னர் 500 கி.மீ தொலைவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து அங்கிருந்து சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ள பெங்களுருக்கு வந்து இன்று அவர் சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் மீண்டும் 3,500 தொலைவில் உள்ள திரிபுராவுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார். இதன் மூலம் 90 மணி நேரத்தில் சுமார் 10,800 கி.மீ தொலைவு வரை பிரதமர் நரேந்திர மோடி பயணித்துள்ளார். இந்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி தொடர்ந்து பிஸியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

வெற்றிக்காக பயணம்
ஏனெனில் இந்த தேர்தல் முடிவுகள் எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை பாதிக்கும் என்பதால் மாநில தேர்தல்களில் தங்கள் முழு பலத்தையும் காட்ட பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதனால் பிரதமர் மோடி மட்டுமல்லாது அமித்ஷா உள்ளிட்ட தலைவரும் இதே போல பிஸியாகதான் இருப்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications