மிசோரம் தேர்தல்! ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள்.. இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
டெல்லி: மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் தலைமுறை வாக்காளர்கள் 'தேர்தல்' எனும் ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

வாக்கு பதிவுக்காக மொத்தம் 1,276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கிராமப்புறங்களில் 751 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புறங்களில் 525 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் 4,12,969 ஆண்கள், 4,38,925 பெண்கள், ஒரேயொரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 8.51 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.
இன்று மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்குவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மிசோரம் மியான்மருடன் 510 கி.மீ, வங்கதேசத்துடன் 318 கி.மீ அளவில் எல்லையை பகிர்ந்துக்கொண்டிருப்பதால் எல்லையிலும் தீவிர கண்காணிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. இன்று காலை 7 மணி அளவில் திட்டமிட்டபடி வாக்குப்பதிவு தொடங்கியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதல் தலைமுறை வாக்காளர்கள் 'தேர்தல்' எனும் ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, "மிசோரம் மக்கள் முடிந்தவரை அனைவரும் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுக்கிறேன்" என்று கூறியுள்ளார். மிசோரம் மாநிலத்தில் முன்னெப்போதையும் விட தற்போது அதிக அளவில் இளம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வென்று 37.8 சதவிகித வாக்குகளுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 8 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை ஜோரம் மக்கள் இயக்கம் பிடித்தது. அதேபோல காங்கிரஸ் வெறும் 5 இடங்களை மட்டுமே பிடித்தது. பாஜக 1 இடத்தோடு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications