டார்வின் கோட்பாடு தவறு! E=mc2ன்னு சமன்பாடே கிடையாதாம்! உச்சநீதிமன்றத்திற்கு வந்த விநோத வழக்கு
டெல்லி: பிரபல அறிவியல் விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் சார்லஸ் டார்வினின் கோட்பாடுகள் தவறு என கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
உலகின் மிகவும் பிரபலமான கண்டுபிடிப்புகளில் முதன்மையானவைதான் பரிணாம வளர்ச்சி கோட்பாடும், E=mc2 எனும் சமன்பாடும். இன்றைக்கும் இந்த கண்டுபிடிப்புகள் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை புரிந்துக்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள், நோய் தன்மைக்கு கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள், அறுவை சிகிச்சை என ஏராளமான விஷயங்களுக்கு தீர்வுகளை கண்டிருக்கிறோம். அந்த வகையில் டார்வினின் கோட்பாடு மனித சமூகத்தை மேலும் அடுத்த கட்டத்திற்கு பாதுகாப்பாக நகர்த்தி செல்ல நமக்கு உதவியது.

அதேபோல ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் E=mc2 எனும் சமன்பாடு, விண்வெளி அறிவியலில் நாம் பல மகத்தான சாதனை படைக்க கைகொடுத்திருக்கிறது. ஒளியை பற்றி புரிந்துகொள்ளவும், மனிதர்களால் ஏன் டைம் ட்ராவல் செய்து கடந்த காலத்திற்கு போக முடியாது என்பது குறித்தும் இந்த சமன்பாடு நமக்கு விளக்கியது. ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் சார்லஸ் டார்வினின் கோட்பாடுகள் தவறு என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜ்குமார் என்பவர்தான் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது, "மனுதாரர் டார்வினிய பரிணாமக் கோட்பாடு மற்றும் ஐன்ஸ்டீனின் சமன்பாடு தவறு என்பதை நிரூபிக்க விரும்புகிறார். அது அவரது நம்பிக்கையாக எனில் இது குறித்து அவர் பிரசாரம் செய்யலாம். ஆனால் இதை ஒரு மனுவாக தாக்கல் செய்ய முடியாது. இவர் தன் பள்ளியில் படித்தவற்றை தவறு என்று கூறுகிறார். இதற்கு எதிரான ஏதேனும் கோட்பாடு இருப்பின் அதை அவர் மேம்படுத்தலாம். ஆனால் அதற்காக உச்சநீதிமன்றம் என்ன செய்ய முடியும்?" என்று நீதிபதிகள் கூறினர்.
இடையில் குறுக்கிட்ட மனுதாரர், இந்த விஷயத்திற்காக நான் எங்கு செல்ல வேண்டும்? என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "இந்த விவகாரம் குறித்து நீங்கள் எங்கு போக வேண்டும் என்பது தொடர்பாக சொல்ல எங்களுக்கு எந்த ஆலோசனை அதிகாரமும் இல்லை" என்று கூறினர். இதற்கிடையில் டார்வின் கோட்பாட்டை ஏற்றதால் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பதை நம்ப வைக்க மனுதாரர் முயன்றார். ஆனால் அவரின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications