விமானத்தில் இருந்து இறங்கிய அடுத்த நொடி.. பஞ்சாப் முதல்வர் கைது? டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு
டெல்லி: பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு திரும்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சுமார் 3 மணி நேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதன்பிறகு அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
தேசிய அரசியலில் பாஜகவை மிக கடுமையாக எதிர்த்து வரும் கட்சிகளில் ஒன்றாக ஆம் ஆத்மி இருக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தாலும் கூட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தான் ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்போதும் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் தடுப்பு காவல்
அதாவது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கிருந்து விமானம் மூலம் அவர் நேற்றிரவு டெல்லி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து புறப்பட தயாரானபோது, அவரது உடைமைகள் இன்னும் வந்து கொண்டிருப்பதாகவும் சோதனை நடைபெறுவதாகவும் கூறி அதிகாரிகள் காத்திருக்க வைத்ததாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகே பகவந்த் மான் புறப்பட அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் தனது உடைமைகளை வாகனத்தில் ஏற்றிவிட்டு செல்லத் தயாரானபோது அதிகாரிகள் அவரை நோக்கி ஓடி வந்து, "மேலிடத்தில் இருந்து எங்களுக்கு கடும் அழுத்தம் வருகிறது" என்று கூறியதாகவும் ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பகவந்த் மானுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், எந்த காரணத்துக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவுபடுத்தவில்லை.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜும் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் பொருட்களை பாரிஸில் அறிமுகப்படுத்த சென்ற முதல்வர், டெல்லி விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பாரிஸ் பயணத்துக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து பகவந்த் மான் நீதிமன்றத்தை நாடிய பின்னரே இந்த பயணத்திற்கு அனுமதி கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தசரா நாளில் ராவணனின் ஆணவம் முடிவுக்கு வந்ததை போல, மத்திய அரசின் ஆணவமும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வரை விமான நிலையத்தில் 3 மணி நேரம் தடுப்பு காவலில் வைப்பதும், ரூ.50,000 அபராதம் விதிப்பதும் அவருக்கு பஞ்சாப் மக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு என்று பல்தேஜ் பன்னு குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னணி
பாரீஸில் நடந்த சர்வதேச உணவு பொருட்கள் வர்த்தக கண்காட்சியில் பஞ்சாப் மாநிலத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக பகவந்த் மான் பாரிஸ் சென்றிருந்தார். இந்த பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து அனுமதி வழங்கியது.
எதிர்க்கட்சிகள்
அதேநேரம் பஞ்சாப்பில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் பிக்ரம் சிங் வேறு ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதாவது பகவந்த் மான் மற்றும் அவரது மனைவி குர்பிரீத் கவுர் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பணம் வைத்திருந்தார்களா என்பது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்ததாக அவர் கூறினார். பகவந்த் மான் முதல்வர் பதவியில் இருக்கும் நிலையில், அதை கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
