"மோடி எனது செல்போனை ஒட்டுக்கேட்கிறார்!" மொபைலை உயர்த்தி காட்டி ராகுல் காந்தி சொன்ன வார்த்தை.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது செல்போனை ஒட்டுக்கேட்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தனது செல்போனிலேயே இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருப்பதாக கூறிய ராகுல் காந்தி, இவை அனைத்தும் மோடிக்கும் தெரியும் என கூறியுள்ளார். மேலும், தேர்தல் நடைமுறை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி தன்னுடன் விவாதம் நடத்த வேண்டும் எனவும் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
நாட்டின் இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான நடவடிக்கைகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்ஸ்டாகிராமில் நடைபெற்ற 'Ask Me' என்ற ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். இதில் பல்வேறு தரப்பினரும் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.

ஒட்டுக்கேட்கிறார்கள்
அப்போது பிரதமர் மோடி தனது செல்போனை ஒட்டுக்கேட்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். தனது போனில் பிரதமருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். அவர் மேலும், "இந்த போனில்தான் அதற்கான ஆதாரம் இருக்கிறது. பிரதமருக்கும் இது தெரியும். ஏனென்றால், அவர் எனது போனை ஒட்டுக்கேட்கிறார்" என்று தனது செல்போனை கையில் காட்டினார். இருப்பினும் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் எதையும் ராகுல் காந்தி வெளியிடவில்லை.
குற்றச்சாட்டு
செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக ராகுல் காந்தி ஏற்கெனவே பலமுறை குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டிலும், தன்னுடைய செல்போனிலும், பல அரசியல் தலைவர்களின் தொலைபேசிகளிலும் பெகாசஸ் உளவு சாப்ட்வேரை நிறுவப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். அப்போது உளவுத்துறை அதிகாரிகள் தன்னை தொடர்புகொண்டு, செல்போனில் என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் எச்சரித்ததாக ராகுல் தெரிவித்திருந்தார். இருப்பினும், மத்திய அரசு அப்போதே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விவாதம்
இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியிலும் தனது போனில் ஆதாரம் இருப்பதாகக் கூறிய ராகுல், பிரதமருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். யார் வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.. யார் தேச விரோதமாக செயல்படுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு ஒரே விவாதத்தில் முடிவு கிடைத்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த விரும்புவதாக என்று ராகுல் காந்தி தொடர்ந்து சொல்லி வருகிறார். கடந்த 12 நாட்களில் மட்டும் அவர் 7வது முறையாக விவாதத்திற்கு வரும்படி சவால் விடுத்துள்ளார். தேர்தல் நடைமுறைகள், வெளிநாட்டுத் தலையீடு, தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வெளிப்படையான விவாதம் நடத்த வேண்டும் என்பது ராகுல் காந்தியின் கோரிக்கையாக உள்ளது.
பாஜக
ஆனால், ராகுலின் இந்த விவாத அழைப்புகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பு இருக்கும்போது, அங்கு விவாதிப்பதை தவிர்த்துவிட்டு பிரதமருக்கு தனியாக சவால் விடுப்பதாக பாஜகவினர் விமர்சிக்கின்றனர். குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "விவாதம் நடத்த பிரதமர் ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் ஏன் கேட்கிறார்? விவாதம் நடத்த நாடாளுமன்றம் ஏற்கெனவே இருக்கிறதே" என்று விமர்சித்திருந்தார்.
இவ்வாறு, பிரதமருடன் நேரடி விவாதம் நடத்த வேண்டும் என்ற ராகுலின் தொடர் கோரிக்கையும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்த அவரது புதிய குற்றச்சாட்டும் அரசியல் விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications
