அதிரப்போகும் டெல்லி.. நாளை திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்!
டெல்லி: யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பாக நாளை டெல்லியில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், பிற மாநில மாணவர் அமைப்புகளும் பங்கேற்க உள்ளனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் பல்கலைக்கழக மானிய குழு புதிய வரைவு நெறிமுறைகளை வெளியிட்டது. இதற்கு திமுக தரப்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவரணி தரப்பில் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் பேசுகையில், மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநில உரிமைகளை பறித்து வருகிறது.
குறிப்பாக கல்வியை காவிமயமாக்குவதற்காக தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக முதலில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அந்த அறிக்கையில் வழங்கப்பட்டதை போல், யுஜிசி என்ற ஒன்று இருக்காது. உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஒரு அதாரிட்டி கொண்டு வருவோம் என்று கூறினார்கள். அன்று யுஜிசி வேண்டாம் என்று நினைத்த பாஜக, இன்று யுஜிசி மூலம் கல்வியை அபகரிக்க முயற்சிக்கிறது.
பல்கலைக்கழக நிதி நல்கை குழு என்பதனை, இன்று பல்கலைக்கழக விழுங்குகின்ற குழுவாக மாறுகின்ற வகையில் மாநில உரிமையையும் பறிப்பதற்கு பல வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனை எப்போதும் போல விரைவாக எதிர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு தரப்பில் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக ஒரு மாதத்திற்குள் கருத்து வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். அதனால் கருத்துகளையும், கண்டனங்களையும் மின்னஞ்சல் மூலம் அளித்து வருகிறோம். இந்த நிலையில் டெல்லியில் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். நாளை ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பாக மாபெரும் அறப்போராட்டம் நடக்கவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். அதேபோல் டெல்லியில் உள்ள எஸ்எஃப்ஐ, ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பினரும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications