நடுரோட்டில் மயங்கி விழுந்த பெண் எம்பி! உடனே ஓடி வந்து உதவிய ராகுல் காந்தி! களேபரமான டெல்லி போராட்டம்
டெல்லி: வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக இன்று டெல்லியில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபடப் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். இதைக் கவனித்த ராகுல் காந்தி, உடனடியாக அங்குச் சென்று அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கடந்த வாரம் ராகுல் காந்தி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதாவது வாக்காளர் பட்டியல் குளறுபடி இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் பாஜகவோடு கூட்டு வைத்து மோசடி செய்வதாகவும் விமர்சித்திருந்தார். மேலும், இதற்கு ஆதாரம் எனச் சொல்லி அவர் பல்வேறு டாக்குமெண்டுகளையும் போட்டோக்களையும் கூட பகிர்ந்தார்.

ராகுல் காந்தி போராட்டம்
இது தேசியளவில் பேசுபொருளானது. மேலும், ராகுல் காந்தி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்து இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். இதையடுத்து டெல்லியில் வாக்காளர் திருட்டு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தை நோக்கி நடக்கும் இந்தப் பேரணியில் 25 கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாகச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி முற்பகல் இந்தப் பேரணி தொடங்கியது. பல்வேறு கட்சிகளின் எம்பிக்களும் தேர்தல் ஆணையத்தை நோக்கிய இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணைய வளாகத்தில் நுழைய எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் அங்கிருந்த போலீசாருக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அகிலேஷ் யாதவ் அங்கிருந்த தடுப்புகளையும் கூட தாண்டிக் குதித்து போராட்டம் செய்தார்.
பரபரப்பு
இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்பிக்கள் உள்ளிட்டோரைக் கைது செய்தனர். இதற்காகப் பேருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டனர்.
#WATCH | Lok Sabha LoP Rahul Gandhi and others help TMC MP Mitali Bagh, who fainted during the opposition protest and the resulting detention by the police. pic.twitter.com/5Rpw67O8P2
— ANI (@ANI) August 11, 2025
உதவிய ராகுல் காந்தி
இந்தக் குழப்பத்திற்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. அங்குப் புழுக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெண் எம்பிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குறிப்பாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மிதாலி பாக், போராட்டக் களத்திலேயே மயங்கினார். கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்ட ராகுல் காந்தி இதைக் கவனித்தார். உடனடியாக அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். மயங்கி விழுந்த மிதாலி பாக்கை பத்திரமாக அழைத்துச் சென்ற ராகுல் காந்தி, காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
டெல்லி போலீஸ் விளக்கம்
முன்னதாக எம்பிக்கள் கைது செய்யப்பட்டது குறித்து டெல்லியின் கூடுதல் ஆணையர் தீபக் புரோஹித் கூறுகையில், "எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எத்தனை எம்பிக்களை கைது செய்துள்ளோம் என்பதைக் கணக்கிட்டு வருகிறோம். இங்குப் போராட்டம் நடத்த அனுமதி இல்லை . மேலும், அவர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனுவும் கொடுக்கவில்லை. தலைவர்கள் விரும்பினால், தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் செல்ல வசதி செய்து தரப்படும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications