இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி: விமர்சனங்களை சந்திப்பது ஏன்?
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது, இடஒதுக்கீடு குறித்து சொன்ன கருத்துக்கள் கடுமையாக சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவில் இடஒதுக்கீட்டின் எதிர்காலம் பற்றி கேட்டபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் எல்லாம் நியாயாமாக இருக்கும் போது.. இடஒதுக்கீட்டை அகற்றுவது பற்றி நாங்கள் யோசிப்போம். இப்போது இந்தியா ஒரு நியாயமான நாடாக இல்லை." என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் இந்த கருத்து பரவலான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்து உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் பேசியது மட்டுமின்றி இந்தியாவை இழிவு படுத்தும் வகையிலும் அவர் பேசி உள்ளார்.
குவியும் எதிர்ப்பு:
காங்கிரஸ் கட்சி இப்போது என்று இல்லை.. எப்போதுமே இட ஒதுக்கீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளது. காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலன் போல தன்னை காட்டிக்கொள்ளும். ஆனால் உண்மையில் காங்கிரசின் வரலாற்றை பார்த்தால்.. அந்த கட்சி அப்படிப்பட்டது அல்ல என்பது புலப்படும். உதாரணமாக காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரான ஜவஹர்லால் நேரு, இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் விதமாக உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுத்தது இல்லை.

பின்னர், இந்திரா காந்தியின் பதவிக்காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி, OBC களை "முட்டாள்கள்" என்று கூட குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது அப்பாவிற்கு தப்பாமல் மகன் இடஒதுக்கீடு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
வரலாற்று ரீதியாக நடந்த இந்த விஷயங்களை எல்லாம் பார்த்தால்.. காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு குறித்து வைத்து இருக்கும் கொள்கை கேள்விக்கு உள்ளாகின்றன. காங்கிரஸ் உண்மையில் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
SC (பட்டியலிடப்பட்ட சாதிகள்), STகள் (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) மற்றும் OBC கள் (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) போன்ற விளிம்புநிலைக் குழுக்களுக்கு உண்மையிலேயே அதிகாரம் அளிக்க அந்த கட்சி விரும்புகிறதா அல்லது நாடகம் ஆடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துக்கள் இந்த சந்தேகத்தை மேலும் அதிமாக்குகின்றன. வாய்ப்பு கிடைத்தால் இடஒதுக்கீடு கொள்கைகளை அகற்ற அல்லது நீர்த்துப்போகச் செய்ய காங்கிரஸ் தயாராக இருக்கும் என்ற சந்தேகத்தையே ராகுலின் பேச்சு எழுப்பி உள்ளது. ராகுலின் பேச்சு காரணமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எங்கே இடஒதுக்கீட்டை நீக்கி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இடஒதுக்கீட்டின் அவசியம்:
இந்தியா ஆழமான சாதி, வர்க்க மற்றும் மத வேறுபாடுகள்.. சிக்கலான அடுக்குகளைக் கொண்ட ஒரு சமூகமாகும். பல ஆண்டுகளாக பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நடந்தபோதிலும்.. சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை இப்போதும் நாட்டில் நிலவி வருகிறது. SC, ST மற்றும் OBC சமூகங்களுக்கான இடஒதுக்கீடு மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த.. சமமான பிரதிநித்துவதை கொண்டு வர நடைமுறையில் உள்ளது. வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்தியாவில் இடஒதுக்கீடு அமலில் உள்ளது.
முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இடஒதுக்கீட்டிற்கு தேவை இருந்ததைப் போலவே இன்றும் இடஒதுக்கீடு அவசியமாக உள்ளது. சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலை அடிப்படையிலான பாகுபாடு மக்கள் இடையே உள்ளது. இந்த வேறுபாடுகள் காரணமாக மில்லியன் கணக்கானவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் இன்னமும் கிடைப்பது இல்லை. இவர்களுக்கு அடிப்படை உரிமை கிடைப்பதற்கு இடஒதுக்கீடு அவசியம். வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதற்கான தார்மீகத் தேவையாக இடஒதுக்கீடு உள்ளது. மக்களிடையே சமத்துவத்தை.. சம வாய்ப்புகளை கொண்டு வர மத்திய பாஜக அரசு பல திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ராகுல் காந்தி அநாவசியமான கருத்துக்களை இடஒதுக்கீடு குறித்து பேசி உள்ளார்.
இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?:
இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த வரலாற்று ரீதியாக காங்கிரஸ் பலமுறை முயன்று இருக்கிறது. அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ராகுல் காந்தியின் பேச்சு அமைந்து உள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற மக்களை பாதிக்கும் வகையில் காங்கிரஸ் இதற்கு முன் பல சட்டங்களை, கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளை திருத்தும் வகையில் கூட சட்டங்களை கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, காங்கிரஸ் கொண்டு வந்த 93வது சட்ட திருத்தம், டிசம்பர் 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உரிமை மறுக்கப்பட்டது.
கூடுதலாக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா போன்ற அரசு நிதியுதவி நிறுவனங்களில் இடஒதுக்கீடுகளை காங்கிரஸ் கையாண்ட விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளின் உரிமைகளை இது மேலும் பாதித்தது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது முக்கியம்.. இடஒதுக்கீடு மூலம் வழங்கப்படும் சமஉரிமை முக்கியம் இல்லை என்று காங்கிரஸ் எடுத்த தவறான நிலைப்பாடே இதற்கு காரணம்.
முஸ்லீம்களை ஒருங்கிணைக்கும் அதே வேளையில், இடஒதுக்கீட்டை இந்து சமூகங்களை பிளவுபடுத்துவதற்கான ஒரு கருவியாக ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்துகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கருத்து சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இடஒதுக்கீடு குறித்த கட்சியின் நிலைப்பாடு.. வரலாற்று ரீதியாக காங்கிரஸ் எடுத்த முடிவுகள் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இல்லை.
ராகுல் காந்தியின் கருத்தால் ஏற்பட்ட தாக்கங்கள்:
ராகுல் காந்தியின் கருத்துகள், உள்நோக்கத்துடன் இருக்கிறதோ.. இல்லையோ.. இடஒதுக்கீடு குறித்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எதிர்காலத்தில் இடஒதுக்கீடு எப்படி இருக்கும் என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் இடஒதுக்கீடுகளை அகற்றுவது குறித்து உண்மையிலேயே பரிசீலித்துக்கொண்டிருந்தால், அது இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியைப் பற்றிய அச்சத்தை எழுப்பி உள்ளது.
சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான முக்கிய கருவிகளில் ஒன்றான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் காலி செய்துவிடுமோ என்ற அச்சம்.. விவாதம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவை எந்த வகையில் இந்த பேச்சுக்கள் பாதிக்கும் என்ற பயம் எழுந்துள்ளது.
முடிவுரை:
இந்தியாவில் எல்லாம் நியாயாமாக இருக்கும் போது.. இடஒதுக்கீட்டை அகற்றுவது பற்றி நாங்கள் யோசிப்போம் என்று ராகுல் காந்தி பேசியது நியாயமாக தோன்றினாலும்.. இந்தியா போன்ற நாட்டில் இடஒதுக்கீட்டை நீக்கினால் என்ன ஆகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அவரின் இந்த கருத்து பரவலான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்து உள்ளது. எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டை நீக்க காங்கிரஸ் திட்டமிடுகிறதோ என்ற தார்மீக கேள்விகளை ராகுலின் பேச்சு எழுப்பி உள்ளது. இடஒதுக்கீடு என்பது வெறும் வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல.. அது சம வாய்ப்புகளை வழங்கும் திட்டம். அதை எதிர்காலத்தில் நீக்குவது பற்றி ராகுல் காந்தி கொடுத்த சிக்னல் கடுமையாக அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications