அமெரிக்காவுக்காக.. முதுகெலும்பை வளைக்காதீர்கள்! மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!
டெல்லி: UPI கட்டணம் குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா சொல்லிதான் இந்த கட்டணத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது என்றும், முதுகெலும்பை வளைக்காமல் நேராக வைத்திருங்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியிருக்கிறார்.
அக்.15ம் தேதி முதல் UPI மூலம் ரூ.2000க்கும் அதிகமாக பணம் செலுத்தினால் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது வணிகர்களுக்கான கட்டணம்தான் என்றாலும், சாமானிய மக்களையும் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, "அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்தே மத்திய அரசு இந்த UPI வரியை கொண்டு வந்திருக்கிறது. இது அமெரிக்காவின் கிரெடிட்/டெபிட் கார்டு நிறுவனங்கள் இந்தியாவில் UPI உடன் போட்டியிடுவதற்கு வழிவகுக்கும். இந்திரா காந்தியிடம் நீங்கள் இடதுசாரியா? வலதுசாரியா? என்று கேட்டபோது, நான் எங்கும் சாயாமல் நேராக நிற்கிறேன் என்றார்.
ஆனால் மோடியோ, டிரம்ப் முன்னாடி முழுமையாக குப்புற படுத்து கிடக்கிறார். UPI கட்டணம் கொண்டு வந்ததன் மூலம், ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் வரி விதிக்கப்பட்டு, பெரும் பணம் அமெரிக்காவுக்கு தாரளமாக வழங்கப்படுகிறது" என்று இந்திரா காந்தியின் புகைப்படத்திற்கு முன்பு நின்று வெளியிட்ட வீடியோவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களை மத்திய நிதியமைச்சகம் அப்படி மறுத்திருக்கிறது. UPI கட்டணம் என்பது வெளிநாட்டு தாக்கத்தால் ஏற்பட்டது கிடையாது. இப்படி சொல்வது முற்றிலும் தவறு. இந்தியாவின் கொள்கை முடிவுகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை தற்சார்புடையதாகவும், உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்காக சுயேச்சையாக எடுக்கப்பட்டவையாகும் என்று நிதியமைச்சகம் விளக்கம் கொடுத்திருக்கிறது. பொதுமக்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் மாற்றி அனுப்பிக்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது.
UPI OQ கோட் மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சிறு வியாபாரிகள் மற்றும் தெருவோர விற்பனையாளர்களுக்கு இந்த வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் ரயில்வே, எரிபொருள் தொலைத்தொடர்பு, மின்சாரக் கட்டணம் மற்றும் காப்பீடு போன்ற பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே பிளாட் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தைக்கான பரிவர்த்தனைகளுக்கு வெறும் 0.02% மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். இது அதிகபட்சமாக ரூ.300 என்கிற அளவில்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications
