ஏம்மா சரியா கூலி கொடுக்கணும்.. தலையில் இருந்த சூட்கேஸ்! சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல்!
டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி இன்று சுமை தூக்கும் தொழிலாளர்களின் சிவப்பு நிற சட்டையை அணிந்து ராகுல் காந்தி சுமை தூக்கினார். அப்போது அவர் சூட்கேசை தலையில் வைத்து நடந்து சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் செய்தார். பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்த பாதயாத்திரை நடந்து முடிந்தது.

அதன்பிறகு ராகுல் காந்தி தொடர்ந்து ஏழை எளிய சாமானிய மக்களை சந்தித்து வருகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெரும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக மேடைக்கு மேடை முழங்கும் ராகுல் காந்தி அப்போது ஏழை கூலித்தொழிலாளர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ராகுல் காந்தி லாரியில் பயணித்து டிரைவர், கிளீனர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். சமீபத்தில் டெல்லியில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரிகளை பார்த்து குறைகளை கேட்டார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிப்போனார்.
அதாவது டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்துக்கு ராகுல் காந்தி இன்று சென்றார். அங்கு சுமைதூக்கும் தொழிலாளிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கேட்டார். இந்த வேளையில் சுமை தூக்கும் தொழிலாளிகள் அணியும் சிவப்பு நிற சட்டை மற்றும் கையில் கட்டும் பட்டையை ராகுல் காந்தி அணிந்தார்.
இதையடுத்து அவர் சூட்கேசை தலையில் வைத்து சுமந்து சென்றார். இதுதொடர்பான வீடியோவை காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‛‛மக்கள் நாயகன் ராகுல் காந்தி இன்று டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழில் செய்யும் நண்பர்களை சந்தித்தார். சமீபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் ராகுல் காந்தியை பார்க்க வேண்டும் என கூறியதால் ராகுல் காந்தி அங்கு சென்று கலந்துரையாடினார்‛‛ என்றார்.
இதற்கிடையே தான் ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் அணியும் சிவப்பு நிற உடை அணிந்து சூட்கேஸை தலையில் வைத்து சுமந்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications