சாதித்த ராகுல் காந்தி.. ‘பெல்லட்' குண்டு விவகாரத்தில் வழக்குப்பதிந்த போலீஸ்.. 6 மணிநேர தர்ணா முடிவு
டெல்லி: டெல்லியில் கடந்த மாதம் 20 ம் தேதி நடந்த மாணவர் போராட்டத்தின் மீது போலீசார் 'பெல்லட்' குண்டுகளை பயன்படுத்தியதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லியில் ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். 6 மணிநேர தர்ணாவை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் ராகுல் காந்தி போராட்டத்தை கைவிட்டார்.
'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். முன்னதாக அவரை ராஜினாமா செய்ய வைக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 20ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதையடுத்து மாணவர்கள் உள்பட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். அதன்பிறகு மாணவர்கள், போராட்டக்காரர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தான் மாணவர்கள் மீது 'பெல்லட்' குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக போராட்டத்தில் பங்கேற்று காயமடைந்த 19 வயது சாஹில் லோசாப் உடன் ராகுல் காந்தி பேட்டியளித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்தது. இதற்கிடையே தான் இன்று காயமடைந்த 19 வயது மாணவருடன் ராகுல் காந்தி பார்லிமென்ட் தெரு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்தனர்.
இதனால் ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸ் நிலையம் முன்பு ராகுல் காந்தி தர்ணா செய்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். வழக்குப்பதிவு செய்யாவிட்டால் இந்த இடத்தை விட்டு நகரப்போவது இல்லை என்று உறுதியாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இறுதியாக ராகுல் காந்தியின் 6 மணிநேர தர்ணா போராட்த்தை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு ராகுல் காந்தி தனது தர்ணாவை கைவிட்டு போலீஸ் நிலையத்துக்கு மாணவர் சாஹில் லோசாப் உடன் சென்றார். போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 118 மற்றும் 125 ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் பிஎன்எஸ் பிரிவு 118 என்பது ஆபத்தான ஆயுதங்களை கெண்டு ஒருவரை காயப்படுத்துதல் என்பதை குறிக்கும். பிஎன்எஸ் பிரிவு 125 என்பது மற்றவர்களின் உயிர் அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்தல் என்பதை குறிக்கும். இதையடுத்து ராகுல் காந்தி தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டு சென்றார்.


Click it and Unblock the Notifications
