ஆவேசமாக விமர்சித்த மோடி.. நான்கே வரியில் ராகுல் காந்தி கொடுத்த பதில்.. "வந்தே மாதரம்" விவாதம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதம் நடந்து வருகிறது. முதலில் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, வந்தே மாதரம் பாடலை நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், அவர் காங்கிரஸ் மற்றும் நேருவையும் தனது பேச்சில் விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்குப் பிரதமர் மோடி வெறும் நான்கே வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
இப்போது நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த வாரம் பெரும்பாலும் அவை நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவை முடங்கியது. இந்தச் சூழலில் தான். இன்றைய தினம் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது.

வந்தே மாதரம்
தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பான சிறப்பு விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த விவாதத்தைப் பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் தொடங்கி வைத்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது காங்கிரஸின் ஒரு முக்கிய கோஷமாக இருந்த வந்தே மாதரம், இப்போது பாஜகவின் கோஷமாக மாறி இருக்கிறது.
பின்னணி
முன்னதாக கடந்த மாதம் ஃபைசாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, வந்தே மாதரம் தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது 1937ம் ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலின் முக்கிய சரணங்களைக் காங்கிரஸ் நீக்கிவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காங்கிரஸின் இந்த முடிவுகளே பிரிவினையை வித விதைகளை விதைத்தன என்றும் காங்கிரஸ் தேசியப் பாடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்தன என்றும் மோடி விமர்சித்திருந்தார்.
இருப்பினும், இதற்கு அப்போதே காங்கிரஸ் பதிலளித்தது. அதாவது ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின்படியே அந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் காங்கிரஸ் விளக்கமளித்தது. இது பிற சமூகத்தினர், மதத்தினரின் உணர்வுகளை மதிக்கும் செயல் எனவும் கூறியது. மேலும், ரவீந்திரநாத் தாகூரை அவமதித்த பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்தச் சூழலில் தான் இப்போது லோக்சபாவில் விவாதம் நடைபெறுகிறது. இதைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸை மிக கடுமையாக விமர்சித்தார். பாடலின் சில பகுதிகளை நீக்க நேரு எடுத்த முடிவு தவறு என்றும் அதுவே பிரிவிணையின் தொடக்கப் புள்ளியாக அமைந்ததாகவும் அவர் சாடினார்.
ராகுல் காந்தி
இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த ராகுல் காந்தியிடம் வந்தே மாதரம் விவாதம் தொடர்பாகச் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி வெறும் 4 வார்த்தையில் பதிலளித்துச் சென்றார். அதாவது, "பிரியங்கா காந்தியின் பேச்சைக் கேளுங்கள்" என நான்கே வார்த்தைகளில் ராகுல் காந்தி பதிலளித்தார்.. இந்த விவாதத்தில் லோக்சபாவில் வயநாடு எம்பியும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி பேசுகிறார். அவரது பேச்சில் அனல் பறக்கும் என்றே தெரிகிறது. இதன் காரணமாகவே ராகுல் காந்தி இப்படிப் பதிலளித்துச் சென்றதாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள்.
பிரதமர் மோடி
இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "வந்தே மாதரம் கீதம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளைக் கடந்தபோது, நாட்டில் எமர்ஜென்சி நிலை அமல்படுத்தப்பட்டு இருந்தது.. அரசியலமைப்புச் சட்டம் நெரிக்கப்பட்டது. தேசபக்தர்கள் சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டனர். அவசரநிலை நம் வரலாற்றில் இருண்ட அத்தியாயம். இப்போது, 'வந்தே மாதரம்' பாடலின் பெருமையை மீட்டெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது" என என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications