மனு ஸ்மிருதி புத்தகத்தை உயர்த்தி காட்டி.. பெரியாரை மேற்கோளிட்டு பாஜகவை விமர்சித்த ராகுல் காந்தி!
டெல்லி: மக்களவையில் அரசியலமைப்பு தின விவாதத்தில் பாஜக மீது ராகுல் காந்தி சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஒரு கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தையும், மறு கையில் மனு ஸ்மிருதி புத்தகத்தை உயர்த்தி காட்டியும் பெரியாரை மேற்கோளிட்டு ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்நிலையில் அரசியலமைப்பு தின விவாதம் நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று எம்பியாக பிரியங்கா காந்தி முதன் முறையாக நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இன்று அவரது சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.

"அரசியலமைப்பு சட்டத்தை பற்றியும் இந்தியா எவ்வாறு இயங்க வேண்டும் என்பது பற்றியும் ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்கிய தலைவர் சாவர்க்கர் கூறியிருப்பதை நான் இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் இங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் தான் மூலமாக இருக்கிறது.
'அரசியலமைப்பு பற்றி கூற வேண்டும் எனில் அதில் இந்தியர்கள் குறித்து எதுவும் கிடையாது. நமது இந்து தேசத்தில் வேதங்களுக்கு பிறகு மிகவும் மதிப்பு மிக்கதாக இருப்பது மனுஸ்மிருதி தான். நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறையை இது பிரதிபலிப்பதாக இருக்கிறது. மனுஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக இருக்கிறது' என்றுதான் சாவர்க்கர் கூறியுள்ளார்.
அவரது எழுத்துக்களில் அரசியலமைப்பு சட்டம் குறித்து எதுவும் இல்லை. அதாவது அரசியலமைப்பு சட்ட புத்தகம், மனுஸ்மிருதி புத்தகத்தால் முறியடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது நடக்கும் போராட்டமும் இந்த இரண்டு புத்தகங்களுக்கு இடையில்தான்.
இப்போது கேள்வி என்னவென்றால் ஆளும் கட்சியாக இருக்கும் நீங்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் உங்கள் தலைவர் சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா? அவருடைய எழுத்தை அவமானப்படுத்துகிறீர்களா?" என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications