லண்டனில் காசு இல்லாமல் தவித்த ரத்தன் டாடா! என்ன செய்தார் தெரியுமா? அமிதாப் பச்சன் பகிர்ந்த சீக்ரெட்
டெல்லி: நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடா பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் சென்ற போது, உதவியாளர்கள் வராததால் ரத்தன் டாட பணம் இன்றி இருந்ததாகவும் அப்போது, தன்னிடம் பணம் கேட்டதாகவும் பாலிவுட் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். அவ்வளவு பெரிய கோடீஸ்வரர் எளிமையாக இருந்தது பற்றிய சுவாரசிய தகவலை அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இதுபற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
நாட்டின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த 9 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பல லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, தனது எளிமையான பண்பால் அனைத்து தரப்பினாலும் மதிக்கப்படுபவராக இருந்தார். ரத்தன் டாடா தன்னுடன் இருந்தவர்களுக்கு செய்த உதவிகள், அவரது எளிமை பண்புகள் பற்றி பலரும் நெகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

காசு இல்லாமல் இருந்த ரத்தன் டாடா: அண்மையில் கூட ரத்தன் டாடா எழுதி வைத்த உயில்களிலில் தன்னுடைய உதவியாளர், தனது செல்ல நாயை பராமரிக்க ஆகும் செலவு ஆகியவற்றிற்கும் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு சென்றார். ரத்தன் டாடா பற்றிய பல்வேறு தகவல்களும் வெளியாகி வரும் நிலையில், லண்டனில் வைத்து கையில் காசு இல்லாமல் இருந்த ரத்தன் டாடா அங்கே இருந்த அமிதாப் பச்சனிடம் பணம் கேட்ட சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
அமிதாப் பச்சன் பேச்சு: பாலிவுட் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் தான் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அமிதாப் பச்சன் நடத்தி வரும் குரோர்பதி நிகழ்ச்சியின் போது, ரத்தன் டாட குறித்த தனது நினைவுகளை அவர் பகிர்ந்தார். அமிதாப் பச்சன் கூறியதாவது:- நானும் ரத்தன் டாடாவும் லண்டனுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தோம். ஹீத்ரோ விமானநிலையத்தில் தரையிறங்கிய பிறகு அவரது உதவியாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை ரத்தன் டாடா கவனித்தார்.
என்னிடம் பணம் கேட்டார்: அங்கே இருந்த டெலிபோன் பூத்திற்கு ரத்தன் டாடா சென்றார். அப்போது நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் வெளியே வந்த ரத்தன் டாடா, என்னிடம் வந்து எனக்கு கொஞ்சம் பணம் கடனாக தர முடியுமா? என்னிடம் போன் செய்வதற்கு பணம் இல்லை என்றார். அவ்வளவு பெரிய கோடீஸ்வரர் இப்படி எளிமையாக இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை" என்றார்.
லிஃப்ட் கேட்ட ரத்தன் டாடா: அதேபோல தனது நண்பருக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையே நடந்த மற்றொரு உரையாடல் குறித்து பேசிய அமிதாப் பச்சன் கூறியதாவது:- ரத்தன் டாடா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் என் நண்பர் ஒருவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும், என் நண்பரிடம் ரத்தன் டாடா, தன்னை வீட்டில் இறக்கி விட முடியுமா என்று கேட்டுள்ளார். உங்கள் வீட்டிற்கு பின்னால்தான் நான் வசிக்கிறேன். என்னிடம் கார் இப்போது இல்லை என்று சொன்னாராம். இதனைக்கேட்ட என் நண்பர் வியந்து போனார்' என்று கூறியுள்ளார்.
10 ஆயிரம் கோடி சொத்து: பெரும் தொழில் அதிபரான ரத்தன் டாடாவுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தன. இந்த சொத்துக்கள் அனைத்தும் இறப்பிற்கு பிறகு யாருக்கு கிடைக்க வேண்டும் என ரத்தன் டாடா உயில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அதன்படி, தனது சகோதரர் ஜிம்மி டாடா, தனது தாயின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகியோருக்கும் சொத்துகள் கிடைக்கும்படி உயில் எழுதியிருக்கிறார்.
நாய்க்கும் சொத்து பகிர்வு: குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து, தனது உதவியாளர் சாந்தனு, சமையல் கலைஞர் ராஜன் ஷா, மற்றும் சமையல் உதவியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்துக்கள் கிடைக்கும் வகையில் உயில் எழுதியுள்ளார். அதேபோல, கடைசி காலத்தில் செல்லமாக வளர்த்து வந்த நாயான டிட்டோவின் பெயரையும் உயிலில் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார். வளர்ப்பு நாயை சமையல் கலைஞராக பணியாற்றிய ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ரத்தன் டாடா, அதைக் கவனித்துக் கொள்ள ஆகும் செலவை ஈடுகட்டும் விதமாக தனியாக சொத்துக்களை ஒதுக்கி வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications