குடும்ப அட்டைதாரர்களுக்கு.. ₹541 கோடி ரேஷன் அரிசி மானியத்தை மத்திய அரசு விடுவிக்குமா? பறந்த கோரிக்கை
டெல்லி: அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டம் மற்றும் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கான அரிசி மானிய நிலுவைத் தொகையை விடுவிப்பது தொடர்பாகத் தமிழக அரசு டெல்லியில் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஏழை எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று. மத்திய அரசிடம் தமிழக உணவுத் துறை சார்பில் நேரிலேயே சென்று வலியுறுத்தப்பட்டுள்ளது... தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இப்படியொரு சந்திப்பு டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது.
அந்தியோதயா அன்ன யோஜனா என்பது இந்தியாவின் ஏழ்மையான குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சூப்பர் திட்டமாகும்.

அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களில், மிகவும் பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குடும்பங்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும், ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், மற்றும் நிலையான வருமானம் இல்லாத தினக்கூலி தொழிலாளர்கள் போன்று நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை தரப்படுகின்றன..
இந்த திட்டத்தின் கீழ்தான் ரேஷன் கார்டுகளும் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்து, சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு அடிப்படை உணவுத் தேவையை தடையின்றி கிடைக்க செய்வதே இதன் நோக்கமாகும்.
மலிவு விலையில் உணவுப்பொருட்கள்
இந்த திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்ன தெரியுமா? தகுதியான ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவு தானியங்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 1 கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும், தினை போன்ற தானியங்கள் 1 ரூபாய்க்கும் மிக மலிவான விலையில் தலா 35 கிலோ வரை வழங்கப்படுகிறது.
இதனால் சாமானிய மக்களின் மாதாந்திர உணவு செலவு குறைகிறது.. பின்தங்கிய மக்கள் பட்டினியால் வாடுவதை தடுக்கிறது.. அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தான உணவை நியாயமான முறையில் கொண்டு சேர்க்கிறது..
தமிழக அமைச்சர் முக்கிய வேண்டுகோள்
இந்நிலையில், தமிழகத்துக்காக ஒரு முக்கிய கோரிக்கை டெல்லியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.. தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் செயலர் அமுதா ஆகியோர் மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேற்று நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
அப்போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கையான அரிசி கொள்முதல் இலக்கை நடப்பு சீசனில் 16 லட்சம் டன்னில் இருந்து 29.79 லட்சம் டன்னாக கணிசமாக உயர்த்த வேண்டும் என்று மிக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது. தமிழக மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இந்த இலக்கு உயர்வு மிகவும் அவசியம் என்பதை அமைச்சர் வெங்கடரமணன் மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துக் கூறினார்.
மானிய நிலுவைத் தொகையான 541.27 கோடி
பிறகு, தமிழகத்தில் உள்ள அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை கார்டுதாரர்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய அரிசி மானிய நிலுவைத் தொகையான 541.27 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழகத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, இந்த மானியத் தொகை நிலுவையில் இருப்பதால் ஏற்படும் சவால்களை எடுத்துரைத்த அமைச்சர், இந்த நிதியைத் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.. தமிழகத்தின் இந்த அடுத்தடுத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசிடமிருந்து என்ன மாதிரியான பதில் வரப்போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!


Click it and Unblock the Notifications
