நேபாள பாஸ்போர்ட்டுகளுடன் சீனா உளவாளிகள் ஊடுருவல்- ஆக்டிவ் மோடில் 'ஸ்லீப்பர் செல்கள்'- 'ரா' வார்னிங்!
டெல்லி: நேபாள நாட்டு பாஸ்போர்ட்டுகளுடன் சீனா உளவாளிகள் இந்தியாவுக்கு ஊடுருவியிருப்பதாக மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா' (R& AW) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாளம் சீனாவுடன் மிக நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தளமாக நேபாளத்தை சீனா பயன்படுத்தக் கூடும் என்பது உளவு அமைப்புகளின் எச்சரிக்கை. இதனால் நேபாள நாட்டு பாஸ்போர்ட்டுடன் இந்தியாவுக்குள் நுழைபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என 'ரா' அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, நாக்பூரில் நேபாள பாஸ்போர்ட்டுடன் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கர நாசவேலைகளை நிகழ்த்த ஏற்கனவே இருக்கும் ஸ்லீப்பர் செல்களை ஆக்டிவ் செய்யும் நோக்கத்துடன் இந்த நபர்கள் உள்ளே ஊடுருவியிருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் நீண்டகாலம் தங்கி இருக்கும் நேபாள நாட்டவரும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனராம். நேபாளி, இந்தி, ஆங்கில மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்ற உளவாளிகளை சீனா தேர்வு செய்து இந்தியாவுக்குள் அனுப்புகிறதாம்; இந்தியாவில் ஆன்லைன் ஆப் மோசடி உள்ளிட்ட பொருளாதார குற்றங்களை சுனாமி போல நிகழ்த்துவது; இந்தியாவுக்கு தலைவலி தரக் கூடிய தீவிரவாத இயக்கங்களை உருவாக்குவது என்பதுதான் சீனாவின் பிரதான அஜெண்டா எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியர்கள் போர்வையிலும் இந்த சீனா உளவாளிகள் பெரும் நிறுவனங்களை நோக்கி படையெடுக்கலாம் எனவும் முன்னெச்சரிக்கை அனுப்பியுள்ளதாம் 'ரா'.
ஆகையால் நேபாளிகள் போன்ற தோற்றம் உள்ள நபர்களை பணிக்கு சேர்க்கும் முன்னர் கவனமாக இருக்க வேண்டும் என பெருநிறுவனங்களுக்கும் ரா அமைப்பின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறதாம். நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கும் வகையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கான போலி நிறுவனங்களை உருவாக்கி அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை தங்களது வலைகளில் சிக்க வைக்கும் சீனா உளவாளிகள் திட்டமிட்டிருக்கக் கூடும் என்பதும் உளவு அமைப்புகளின் எச்சரிக்கை என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications