ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்! டிசம்பரில் EMI உயர போகுது.. என்ன காரணம்?
டெல்லி: வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் தனது ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படி வட்டி உயர்த்தப்பட்டால், வங்கிக் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பதுடன், மாதந்தோறும் செலுத்தும் EMI தொகையும் உயரலாம்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது.

பணவீக்கம்
CPI எனப்படும் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது உச்சபட்ச பணவீக்கமாகும். ரிச்ர்வ் வங்கி அதிகபட்ச பணவீக்க வரம்பாக 6 சதவீதம் என வைத்துள்ள நிலையில், அதையும் தாண்டி அக்டோபர் மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
வட்டி விகிதம்
இந்த சூழலில் தான் ரிசர்வ் வங்கியின் நிதி குழு கூட்டம் வரும் டிசம்பர் 2 முதல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் 25 புள்ளிகள், அதாவது 0.25% உயர்த்தப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏற்கெனவே அக்டோபரில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் வட்டி உயர்வு இதுவாகும். தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மீண்டும் வட்டி உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்க உணவு பொருட்களின் விலை உயர்வு முக்கியக் காரணமாக உள்ளது. பால், சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலைகள் இப்போதும் அதிகரித்துள்ளதால் நவம்பர் மாதத்திலும் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள். கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு மற்றும் உற்பத்தி செலவுகளும் நிலமையை மேலும் மோசமாக்குகிறது.
எல்லாமே உயரும்
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தினால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கடன்களின் வட்டி விகிதங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அதாவது ரெப்போ வட்டி விகிதம் உயரும்போது அவர்களின் மாதாந்திர EMI தொகையை அதிகரிக்கும். EMI தொகையை அதிகரிக்க விரும்பவில்லை என்றால் அவர்கள் ஏற்கெனவே உள்ள காலத்தை விட கூடுதல் காலம் EMI கட்ட நேரிடும். இரண்டில் எந்த ஆப்ஷனை தேர்வு செய்தாலும் நமக்கு கூடுதல் தொகை செலவாகவே செய்யும்.
வீட்டுக் கடன் மட்டுமின்றி, ரெப்போ விகிதத்துடன் தொடர்புடைய கார் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கும் வட்டி உயர்த்தப்படும். புதிய கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கும் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
அதிகரிக்கும்
உதாரணத்திற்கு 20 ஆண்டுகள் கட்டும் வகையில் ₹20 லட்சம் வீட்டு கடன் வாங்கி இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். உங்களின் வட்டி விகிதம் இப்போது 8%ஆக இருக்கிறது என்றால் ரெப்போ வட்டி விகித உயர்வால் வட்டி விகிதம் 8.00%-லிருந்து 8.25%-ஆக அதிகரிக்கும். அப்போது உங்கள் மாதாந்திர EMI₹16,729லிருந்து ₹17,041ஆக உயரும். இந்த 0.25% அதிகரிப்பு காரணமாக உங்கள் ஒட்டுமொத்த வட்டி சுமை ₹75,003 அதிகரிக்கும்.
அடுத்தாண்டும் இருக்கு!
டிசம்பரில் 0.25 சதவீதம் வட்டி உயர்த்தப்படும் என்றாலும் அத்தோடு வட்டி உயர்வு முடிந்துவிடாது. 2027ம் ஆண்டிலும் மேலும் 0.50 சதவீதம் வரை வட்டி உயர்த்தப்படலாம் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் பொருளாதார நிபுணர் உபஸ்னா பரத்வாஜ் கூறியுள்ளார்.. உணவுப் பொருட்களின் விலை, கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை என்றால் வட்டி விகிதத்தை உயர்த்துவது மட்டுமே ஒரே வழியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
