விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற அஷிஷ் நினைவிருக்க! தந்தை அஜய் மிஸ்ராவுக்கு பாஜகவில் மீண்டும் வாய்ப்பு
டெல்லி: 2021 விவசாயிகள் போராட்டத்தின் போது இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற நிலையில், அஜய் மிஷ்ராவிற்கு இந்த முறையும் உபியின் கேரி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாஜக தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.

எதிர்க்கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவே இன்னும் முடியாத நிலையில், எதிர்க்கட்சியினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்: முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி இந்த முறையும் உபி மாநிலத்தில் உள்ள வாரணாசியில் போட்டியிடுகிறார். மூத்த அமைச்சர்கள் அமித்ஷா குஜராத் காந்திநகர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உபி லக்னோ, ஸ்மிருதி இரானி அமேதி என அவர்கள் தங்கள் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மதுராவில் நடிகை ஹேமமாலினி, ராஜஸ்தான் கோட்டாவில் சபாநாயகர் ஓம் பிர்லா களமிறங்குகின்றனர்.
இதில் மத்திய அமைச்சர்கள் 34 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 47 இளைஞர்களுக்கும் 28 பெண்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. எந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ.. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இந்த லிஸ்டில் அறிவித்துள்ளது. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள தொகுதி என்றால் அது உபி மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி தொகுதியாகும்.
விவசாயிகள் போராட்டம்: அங்கே மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் வேறு யாரும் இல்லை. 2021 விவசாயிகள் போராட்டத்தின் போது இவரது மகன் தான் விவசாயிகள் கார் ஏற்றி கொன்றிருந்தார். அதாவது கடந்த 2021 அக்டோபர் மாதம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

ஆத்திரமடைந்த விவசாயிகள் நடத்திய பதில் தாக்குதலில் 3 பாஜக தொண்டர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் மொத்தம் 8 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தது தனிக்கதை. இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
மீண்டும் வாய்ப்பு: இருப்பினும், மகன் செய்த தவறுக்கு தந்தையைத் தண்டிக்க முடியாது என்று பாஜக தரப்பில் விளக்கம் தரப்பட்டது. விவசாயிகள் ஓராண்டிற்கு மேலாகத் தொடர் போராட்டத்தை நடத்திய பிறகு 3 வேளாண் சட்டங்களைப் பிரதமர் மோடி திரும்பப் பெற்ற போதிலும், அஜய் மிஷ்ரா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பைத் தான் ஏற்படுத்தி இருந்தது.
இந்தச் சூழலில் தான் இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு மீண்டும் உபியின் கேரி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. முன்னதாக கடந்த 2021 நடந்த உபி சட்டசபைத் தேர்தலில் கேரி தொகுதியில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications