அன்று உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் இன்று முதல்வர்- உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?
டெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யாமல் இருந்தால் தற்போதைய நிலையில் மீண்டும் முதல்வராகி இருப்பார் என்பதையே உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது கருத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. சிவசேனாவை பாஜகவை இரண்டாக உடைத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அப்போது உத்தவ் தாக்கரே, ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்தார்.
ஆனாலும் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர். பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள், பாஜக இணைந்து புதிய அரசு அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.

இதனிடையே ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று முடிவடைந்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிப்பதாக தெரிவித்தது. இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டிருந்தது.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஷிண்டே தரப்பு சிவசேனா சட்டசபை குழுவின் கொறாடா என ஒருவரை நியமனம் செய்தது சட்டவிரோதம். ஒரு அரசியல் கட்சிதான் சட்டசபைக்கான கொறடாவை நியமனம் செய்ய முடியும். இந்த கொறடா உத்தரவை ஆளுநர் அங்கீகரித்தது சட்டவிரோதம் என சுட்டிக்காட்டினர்.
அதேநேரத்தில் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை தாமாக ராஜினாமா செய்துவிட்டார். அதனால் அவரை மீண்டும் பதவியில் அமர வைக்க முடியாது. உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் அப்போதைய நிலைமையை தொடர வேண்டும் என உத்தரவிட்டிருக்க முடியும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அதாவது உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்யாத நிலையில் ஷிண்டே முதல்வராக்கப்பட்டிருந்தால் தற்போது ஷிண்டே ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு மீண்டும் உத்தவ் தாக்கரே முதல்வராகி இருக்க முடியும் என்பதையே உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications