"சனாதனம் மீது முழு நம்பிக்கை.." வெறும் காலுடன் நடந்தே சென்ற ரிஷி சுனக்.. கோயிலில் சிறப்பு வழிபாடு!
டெல்லி: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தி உடன் சேர்ந்து இன்று டெல்லியில் உள்ள முக்கிய இந்து கோயில் ஒன்றுக்குச் சென்றார்.
தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. நேற்றும் இன்றும் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகெங்கும் இருந்து தலைவர்கள் டெல்லிக்கு வந்தனர். இதனால் அங்கே வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். முதல் நாளான நேற்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஆப்பிரிக்க யூனியன் ஜி20இல் நிரந்தரமாக இணைக்கப்பட்டது.
ஜி20 மாநாடு: இந்த ஜி20 மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் கலந்து கொண்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். நேற்றைய தினம் கூட ரிஷி சுனக்கை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார். ரிஷி சுனக்கை இந்தியாவின் மருமகனாகவே நாட்டில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்து மதத்தைப் பின்பற்றும் ரிஷி சுனக் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்குச் செல்வதைத் தவறாமல் பின்பற்றி வருகிறார். அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு ரிஷி சுனக்- அக்ஷதா மூர்த்தி தம்பதி பிரார்த்தனை செய்ய வந்தனர். இதனால் கோயிலைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கோயிலுக்கு விசிட்: முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்த ரிஷி சுனக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தன்னை ஒரு பெருமைமிக்க இந்து என்று குறிப்பிட்டார். அப்போதே அவர் டெல்லியில் ஒரு கோயிலுக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அவர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அந்த ஜோடி சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் இருந்ததாக கூறப்படுகிறது.
சனாதனம்: இந்த அக்ஷர்தாம் கோயிலின் இயக்குநர் ஜோதிந்திர டேவ் கூறுகையில், "ரிஷி சுனக் இந்து கலாச்சாரப்படி செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலுடன் தான் கோயிலுக்குள் சென்றார்.. அவரை சந்தித்த கொஞ்ச நேரம் உரையாடினோம்.. அவர் சனாதனம் மீது நம்பிக்கை வைத்துள்ளவர் என்பதை எங்களால் உணர முடிந்தது.
ரிஷி சுனக் எங்களைத் தொடர்பு கொண்டு, கோயிலுக்குத் தரிசனம் செய்ய வர விரும்புவதாகத் தெரிவித்தார். கோயிலுக்கு எத்தனை மணிக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று கேட்டார். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று சொன்னோம்.. அதன்படி இன்று காலை வந்த அவர் கோயிலில் விளக்குகளைக் கொண்டு பூஜை செய்தார். இங்குள்ள துறவிகளைச் சந்தித்தார்.. மேலும் கோயிலில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் பூக்களை வைத்து பிரார்த்தனை செய்தார். அவரது மனைவியும் கோயிலில் பூஜை செய்தார்.
நாங்கள் அவருக்குக் கோயிலைச் சுற்றிக் காட்டினோம்.. கோயிலின் மினி மாடலை பரிசாகக் கொடுத்தோம். அவரும் அவரது மனைவியும் இங்கு இருந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். கிளம்பும்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் இங்கே வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்" என்று அவர் தெரிவித்தார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு: ரிஷி சுனக் வருகையை முன்னிட்டு கோவிலைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜி 20 உச்சி மாநாட்டின் காரணமாக ஏற்கனவே டெல்லியில் வரலாறு காணாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்த ரிஷி சுனக், "பிரிட்டனில் இருந்த போது நான் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினேன்..
ஆனால் கிருஷ்ண ஜென்மாஷ்டமியை கொண்டாட முடியாமல் போனது. அதற்குப் பதிலாக நிச்சயம் கோயிலுக்குச் செல்வேன். நான் ஒரு பெருமைமிக்க இந்து. எனது வீட்டில் அப்படிச் சொல்லிச் சொல்லி தான் என்னை வளர்த்தார்கள். இங்கும் நான் அப்படியே வந்துள்ளேன்..." என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications