நதியை சுத்தம் செய்த இளைஞருக்கு நேர்ந்த அவலத்தை பாருங்க! மக்களிடத்தில் மாற்றம் எப்போது வரும்?
டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள அஜ்னர் நதியை, சுரேந்திர சிங் சவுத்ரி என்கிற பிட்டு தபாஹி எனும் இளைஞர் தொடர்ந்து சுத்தம் செய்து வந்தார். இந்த செயல் சர்வதேச அளவில் அவருக்கு பெரும் அங்கீகாரத்தை கொடுத்திருந்தது. ஆனால், நதியை தூய்மைப்படுத்தியபோது அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
முதல்முறை நதியை முழுமையாக தூய்மைப்படுத்தி, குப்பைகளை போட வேண்டாம் என்று கேட்டிருந்தும்.. மக்கள் அதை கேட்காமல் குப்பைகளை வீசியதால், தபாஹி மீண்டும் மீண்டும் நதியை தூய்மைப்படுத்துவதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியதாக இருந்தது. இதனால்தான் அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

நதிகளை அழித்து அந்த இடத்தில் புதியதாக ஒரு சமூகத்தை உருவாக்கிவிட முடியும். ஆனால், எந்த மனித சமூகத்தினாலும் நிச்சயம் புதியதாக ஒரு நதியை உருவாக்க முடியாது. இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால், பொறுப்பற்ற பலரின் செயல்களால் நதிகள் தொடர்ந்து மாசடைந்து வருகிறது.
குறிப்பாக மத்தியப் பிரதேசத்தின் அஜ்னர் நதியின் நிலைமை ரொம்பவே மோசமாக இருந்திருக்கிறது. அஜ்னர் யமுனை நதிப் படுகையின் ஒரு பகுதியாகும். இதைபார்த்த தபாஹி, ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று நதியை சுத்தப்படுத்துவது என்று முடிவெடுத்து களத்தில் இறங்கினார். அவரிடம் பெரிய அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. கைகளுக்கும், கால்களுக்கும் வெறும் கிளவுஸ் மட்டுமே இருந்தது.
இருப்பினும் சுமார் 8 மாதங்கள் வேலை பார்த்து, செப்டம்பரில் நதியை முழுமையாக சுத்தப்படுத்தி முடித்தார். டன் கணக்கில் குப்பைகளை அப்புறப்படுத்தினார். இனி நதியில் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை போட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து.. அறிவிப்பு பலகைகளை வைத்து, பக்கத்தில்.. குப்பைகளை போட பெரிய பேரல்களையும் வைத்திருந்தார்.
ஆனால், நம்மாட்கள் அடுத்த ரெண்டு நாட்களில் அந்த பேரல்களை கையோடு வீட்டிற்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள். பின்னர் தீபாவளி, சத் (வட மாநில பண்டிகை) உள்ளிட்ட பண்டிகை வந்தது. அப்போது மக்கள் வழக்கம்போல.. நதியில் குப்பைகளை கொட்டி பழையபடி மாற்றிவிட்டார்கள். மீண்டும் டன் கணக்கில் குப்பைகள் நிரம்பி, நதி நற்றமெடுக்கிறது.
இதை பார்த்து மன வேதனையடைந்த பிட்டு தபாஹி, மீண்டும் நதியை தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கினார். ஆனால் இந்தமுறை அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. ஏற்கெனவே 8-9 மாதங்களாக அசுத்த நீரில் போதுமான பாதுகாப்புடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததால், பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தோலில் கடும் அரிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக தபாஹி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனால், நதியை தூய்மையாக வைத்திருக்க மக்கள் இன்னும் முன்வரவில்லை.
மக்கள் மாறினால்தான் மாற்றம் நடக்கும். பொது இடங்களில், குறிப்பாக நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் கழிவுகளை கையாளுவதில் போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
நம்மூரில் உள்ள கூவம் எப்போது சுத்தப்படும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?


Click it and Unblock the Notifications
