'ஒருபுறம் மதமாற்றம்.. மறுபுறம் வெளிநாடுகளில் இருந்து வரும் போதை பொருள்..' பகீர் கிளப்பிய மோகன் பகவத்
டெல்லி: திருமணத்திற்காக மதம் மாறுபவர்கள் மிகப் பெரிய தவறு செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், குடும்பங்கள் இந்து மத பெருமைகளைக் குழந்தைகளுக்கு கற்றுத் தராததாலேயே இப்படி சுயநலத்துடன் மத மாற்றங்கள் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உத்தரகண்ட் மாநிலம் ஹல்ட்வானிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.
அங்குப் பேசிய அவர் நமது நாட்டில் இந்து குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்து மத பெருமைகளையும் கருத்துகளையும் கற்றுத் தருவதில்லை என்று விமர்சித்துள்ளார்.

மதமாற்றம் சுயநலம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "மதமாற்றம் ஏன் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? நம் பெண்களும் சிறுவர்களும் மற்ற மதத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? அவர்கள் திருமணம் என்ற ஒன்றுக்காகச் சுயநல நலத்துடன் மதமாற்றம் செய்து கொள்கிறார்கள். இது மிக மிகத் தவறான ஒரு விஷயம். ஆனால் இதில் அவர்களை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. நாம் நமது குழந்தைகளைத் தயார் செய்யவில்லை. இந்து மதத்தின் மரபுகளை இந்தியக் குடும்பங்கள் தான் அடுத்த தலைமுறைக்குப் பரப்ப வேண்டும்.

நமது தவறு
நாம் தான் வீடுகளில் இந்த மதிப்புகளை கற்றுத் தர வேண்டும். நமது மதத்தின் பெருமைகளை மற்றும் மரபுகள் குறித்து நாம்தான் நமது குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். நமது மதம் தொடர்பாக அவர்கள் எதாவது சந்தேகம் கேட்டால், அவர்களுக்குத் தெளிவாக விளக்கிப் புரிய வையுங்கள். அதைவிட்டு அவர்களைக் குழப்பாதீர்கள்" என்று அவர் தெரிவித்தார். நாட்டில் பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களும் மத மாற்றத்தைத் தடுக்கும் வகையில் லவ் ஜிகாத் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இப்படிப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆண்கள் மட்டும் கொண்ட அமைப்பா
தொடர்ந்து பேசிய அவர், "ஆர்எஸ்எஸ் என்றாலே வெறும் ஆண்கள் மட்டும் உள்ள ஒரு அமைப்பு என்று வெளியே ஒரு பிம்பம் உள்ளது. பெரும்பாலான ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம் இந்து சமுதாயத்தை ஒன்றிணைப்பது. அப்படி முழு சமுதாயத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றால் அதில் 50% பெண்கள் பங்கேற்க வேண்டும்.

இந்தியாவின் செல்வம்
இந்தியர்கள் எப்போதும் தங்கள் செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். முதலாம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்றாண்டு வரை இந்தியா செல்வம் நிறைந்த ஒரு நாடாகவே இருந்தது. இந்தியாவை அப்போது தங்கப் பறவை என்றே அனைவரும் அழைத்தனர். ஆனால், இவை எல்லாம் முகலாயர்களின் வருகைக்குப் பிறகு மாற தொடங்கியது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓடிடி கலசாரம்
மேலும், ஓடிடி கலசாரம் குறித்துப் பேசிய மோகன் பகவத், "ஓடிடியில் நமது பிள்ளைகள் என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்று ஓடிடி தளங்களில் அனைத்து வகையான வீடியோக்களும் வருகின்றன. அதில் வருபவை நமது குழந்தைகளுக்கும் சரி சமூகத்திற்கும் சரி நல்ல கண்ணோட்டத்துடன் கூடியது இல்லை. வீட்டில் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும்" என்று பேசினார்.

போதைப் பொருள்
நமது குடும்ப முறையைச் சீர்குலைக்க மேற்குலக நாடுகள் முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய அழர், "மேற்குலக நாடுகள் நமது குடும்ப முறை குறித்து ஆய்வு செய்கிறார்கள். அதை நாம் செய்ய முயல்கின்றனர். அவர்களுக்கு மக்களை எப்போதும் அடிமையாக வைத்திருக்க வேண்டும். இதற்காகத் தான் சீனாவுக்கு அவர்கள் ஓப்பியம் அனுப்பினார்கள். இளைஞர்களை ஓப்பியத்திற்கு அடிமையாக்கி சீனாவை ஆட்சி செய்தார்கள். நமது நாட்டிலும் இப்போது அது தான் நடக்கிறது. போதைப் பொருள் வழக்குகளை எல்லாம் பாருங்கள். அவை எங்கு இருந்து எங்கு அனுப்பப்படுகிறது எனப் பார்த்தால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications