ரஷ்யாவை விட்டு தர முடியாது.. நட்புனா சாதாரண நட்பு இல்லை.. மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் பதிலடி
டெல்லி: ''உலகின் பெரும்பகுதி நாடுகள் பாகிஸ்தானை ஆதரித்தபோது ரஷ்யா இந்தியாவுடன் உறுதியாக நின்றது. பாகிஸ்தானுடனான போரின்போது சோவியத் யூனியன் (தற்போதைய ரஷ்யா) இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது. ரஷ்யாவுடன், இந்தியாவின் அனுபவம் நேர்மறையானதாகவும், தொடர்ந்து நேர்மறையானதாகவும் இருந்து வருகிறது'' என்று அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார்.

டெல்லியில் முனிச் பாதுகாப்பு மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.
அதேபோல் பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின்போது ஜெய்சங்கரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா நட்பு பாராட்டுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ''இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்டவை அச்சுறுத்தலுக்கு ஆளானபோதெல்லாம் ரஷ்யா தான் எங்களுடன் உறுதியாக நின்றது. எங்களின் இரு நாடுகளும் வரலாற்று ரீதியாக நல்லுறவை வைத்துள்ளன. அந்த உறவு தான் இன்று எங்களை நட்பாக வடிவமைத்துள்ளது.
மக்கள் நல்ல வரலாறு அல்லது மோசமான வரலாறு உள்ளிட்டவற்றை மறப்பது இல்லை. உலகின் பெரும்பகுதி பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியை ஆதரித்த காலகட்டத்தில் ரஷ்யா எங்களுடன் நின்றது. 1971-ல் பாகிஸ்தானுடனான போரின்போது சோவியத் யூனியன் (தற்போதைய ரஷ்யா) இந்தியாவிற்கு ஆதரவாக (இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க இருந்ததோடு, போர்க்கப்பல்களை இந்தியாவுக்கு எதிராக அனுப்பியது) இருந்தது.
ஒவ்வொரு நாடும் தனது சொந்த அனுபவத்தின் மூலமாகவே மற்ற நாடுகளுடனான உறவுகளை மதிப்பீடு செய்கிறது. ரஷ்யா பற்றிய இந்தியாவின் கண்ணோட்டத்தை ஐரோப்பா ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோலவே இந்தியாவின் முடிவுகளும், ரஷ்யாவுடனான அதன் சொந்த வரலாற்றையே பிரதிபலிக்கின்றன. அதன்படி ரஷ்யாவுடன், இந்தியாவின் அனுபவம் நேர்மறையானதாகவும், தொடர்ந்து நேர்மறையானதாகவும் இருந்து வருகிறது.
1970-கள் மற்றும் 1980-களில் இருந்த நிலையிலிருந்து இந்த உறவு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவம் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் வளங்கள் சார்ந்த துறைகளும் இருநாடுகள் இடையேயான உறவில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
கச்சா எண்ணெய் விவகாரத்தில் தற்போதைய விமர்சனங்கள் நியாயமற்றவை. அது காரணமின்றி உள்ளது.
உக்ரைன் போரை பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மற்றும் தூதரகம் ரீதியிலான நடவடிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதனை தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. 2022ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது 'இன்றைய காலம் போருக்கான காலம் அல்ல' என்று சொன்னார்'' என ஜெய்சங்கர் பேசினார்.
இதன்மூலம் ரஷ்யா உடனான இந்தியாவின் உறவு பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடியாக பதில் வழங்கி உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ஆனால் நம் நாடு பொருளாதார தடைகளை விதிக்கவில்லை. அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளால் சகித்து கொள்ள முடியவில்லை. ரஷ்யாவுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று அந்த நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்படி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
