"இந்தியா வேற லெவல்!" பாராட்டி தள்ளிய ரஷ்யா அமைச்சர்.. கடுப்பில் அமெரிக்கா.. பரபர சர்வதேச அரசியல்
டெல்லி: உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா பாராட்டியுள்ளது.
உக்ரைனில் பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர், 4 வாரங்களைக் கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போரால் இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, உக்ரைன் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, உக்ரைனில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்
இந்தச் சூழலில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று டெல்லி வந்துள்ளார். உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியிலும் இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பிற உறவுகளைத் தொடர வழிகளைக் கண்டறிந்து வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைன் போருக்குப் பின்னர், ரஷ்யாவின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

அதிருப்தி
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக நேற்று தான் அமெரிக்கா கூறியிருந்த நிலையில், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களின் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைன் போருக்கு மத்தியில் இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

வர்த்தகம்
ரூபிள்-ரூபாய் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாகவும் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அது குறித்தும் அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் தொடக்க உரையில் அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா-உக்ரைன் மோதலைக் குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே உள்ளக் கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா ஆதரவாக உள்ளதாகத் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெய்சங்கர்
அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், "ஒத்துழைப்பை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்களில் பேச்சுவார்த்தையை விரிவுபடுத்தி உள்ளோம். கொரோனா பெருந்தொற்று தொடங்கி பல்வேறு விவகாரங்களில் சர்வதேச அளவில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முக்கிய சந்திப்பு நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று விவாதித்தோம்" என்றார்.

செர்ஜி லாவ்ரோ
அதேபோல செர்ஜி லாவ்ரோ கூறுகையில், "கடந்த காலங்களில் பல கடினமான காலங்களில் கூட இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான உறவு மிகவும் நிலையானதாகவே இருந்துள்ளது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பது வரும் காலத்திலும் தொடரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்தியா உடனான உறவுகளை வலுப்படுத்துவது ரஷ்ய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது. உலக ஒழுங்கை சமப்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

இந்தியாவுக்குப் பாராட்டு
உக்ரைன் நெருக்கடிக்குக் குறைப்பதில் சர்வதேச நாடுகள் ஆர்வமாகவே உள்ளன. இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கும் இந்தியாவின் நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்" என்றார். சீனாவில் தனது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ நேரடியாக இந்தியா வந்தார். ஜெய்சங்கர் உடனான சந்திப்பிற்குப் பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

அமெரிக்கா அதிருப்தி
ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணத்திற்கு முன்பு, அமெரிக்கத் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், ரஷ்யாவுக்கு உதவ முயலும் நாடுகள் கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி விரைவாக அதிகரிக்கவும் வாய்ப்பில்லை என்று தலீப் சிங் தெரிவித்தார். உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மீது அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யா இப்போது இந்தியாவைப் பாராட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications