ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இந்தியா வாங்குமா? நேரடியாக விழுந்த கேள்வி.. மழுப்பிய பியூஷ் கோயல்
டெல்லி: இனிமேல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்போவது இல்லை என்று இந்தியா உறுதியளித்து இருப்பதாகவும் இதனால், 25 சதவீத வரியை ரத்து செய்வதாகவும் டிரம்ப் அறிவித்ததையடுத்து இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதிலை இங்கு காணலாம்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவுக்கு 50 சதவீதம் விதிக்கப்பட்டு இருந்த வரியை 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். இந்தியாவுக்கு பரஸ்பர வரியாக 25 சதவீதமும், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதமும் என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.

மழுப்பிய பியூஷ் கோயல்
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கப்போவது இல்லை என்று இந்தியா உறுதியளித்து இருப்பதாகவும் அதனால், 25 சதவீத வரி ரத்து செய்வதாகவும் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், இன்று வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா கூட்டறிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பியூஸ் கோயலிடம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பியூஷ் கோயல் இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கும் என்று மழுப்பலாக கூறிவிட்டு சென்றார்.
டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், இந்தியா அதை நிறுத்துவதாக உறுதியளித்து இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. நேரடியாகவோ, மறைமுகமாவோ, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று உறுதியளித்து இருப்பதாகவும், அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்து எரிசக்தி தயாரிப்புகளை வாங்கும் என்றும் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் இந்தியா - அமெரிக்கா வெளியிட்ட கூட்டறிக்கையில் ரஷ்யா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் எரிசக்தி பொருட்களை வாங்கும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்புக்கு எரிசக்தி பொருட்கள், விமானங்கள், விமான உதிரிபாகங்கள், மதிப்புமிக்க மெட்டல்கள், தொழில்நுட்ப பொருட்கள் உள்ளிட்டவை வாங்கும் என்று மட்டுமே குறிபிடப்பட்டு இருந்தது.
ஜெய்சங்கர் கூறியது என்ன?
ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தெரியும் என்று பியூஸ் கோயல் கூறும் நிலையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக முன்னதாக கூறும் போது, இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நபர்களில் அவரும் ஒருவர். எனவே அவருக்கே கூடுதல் விவரங்கள் தெரியும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications