நாளைக்கே சம்பளம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. நிதியமைச்சகத்தின் மாஸ்டர் மூவ் பின்னணி
டெல்லி: செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 2026-க்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை 2026 செப்டம்பர் 25 (வெள்ளிக்கிழமை) அன்று வழங்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இம்முடிவு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (பாதுகாப்புத் துறை மற்றும் அஞ்சல் & தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் உட்பட) பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர்(CGA) சஞ்சிதா சுக்லா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, "நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறையின் (DFS) 21.09.2026 நாளிட்ட O.M. எண். 6/8/2014-IR-ஐக் குறிப்பிட்டு இது வெளியிடப்படுகிறது. அதில் 28.09.2026 முதல் 30.09.2026 வரை மூன்று நாட்கள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்தில் வங்கிப் பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான செப்டம்பர் 2026 மாதத்திற்கான சம்பளம்/கூலி/ஓய்வூதியம் மத்திய அரசு அலுவலகங்களால் (பாதுகாப்பு, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உட்பட) 25 செப்டம்பர் 2026 (வெள்ளிக்கிழமை) அன்று பெற்று வழங்கப்பட வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசின் தொழில்துறை ஊழியர்களுக்கான செப்டம்பர் 2026 சம்பளம செப்டம்பர் 25 அன்று முன் பணமாக வழங்கப்படலாம்.
அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான செப்டம்பர் 2026 ஓய்வூதியமும் வங்கி/PAO-க்கள் மூலம் செப்டம்பர் 25ம் தேதி அன்று வழங்கப்படலாம்.

இவ்வாறு வழங்கப்படும் சம்பளம்/கூலி/ஓய்வூதியம் முன்பணக் கொடுப்பனவாகக் கருதப்படும், மேலும் ஒவ்வொரு ஊழியர்/ஓய்வூதியதாரரின் முழு மாதச் சம்பளம்/கூலி/ஓய்வூதியம் தீர்மானிக்கப்பட்ட பிறகு சரிசெய்யப்படும். சரிசெய்தல் ஏதேனும் இருப்பின், விதிவிலக்கின்றி அக்டோபர் 2026 சம்பளத்தில்/கூலியில் இருந்து சரி செய்யப்படும்.
வேலைநிறுத்தக் காலம் நடப்பு காலாண்டின் இறுதி நாட்களோடு ஒத்துப்போவதால், தாமதங்கள் மற்றும் இடையூறுகளைத் தவிர்க்க, சாத்தியமான இடங்களில் செப்டம்பர் 2026 முடிவில் திட்டமிடப்பட்ட அலவன்ஸ் மற்றும் பிற வங்கிப் பரிவர்த்தனைகளும் முன்னதாகவே செயல்படுத்தப்படலாம்.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகள் உடனடியாகத் தேவையான நடவடிக்கைக்காக இந்த வழிகாட்டுதல்களைத் தங்களின் அலுவலகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் தேவையான நடவடிக்கைக்காக அனைத்து வங்கியின் பணம் செலுத்தும் கிளைகளின் கவனத்திற்கு இந்த வழிகாட்டுதல்களைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது இந்தியாவின் கணக்குகள் தலைமைக்காப்பாளரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது" இவ்வாறு அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு நாளையே அதாவது செப்டம்பர் 25ம் தேதி செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பட உள்ளதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை சமாளிக்க பொதுமக்களுக்கும், வங்கி நிறுவனங்களுக்கும் சில வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் வழங்கி உள்ளன, அதன்படி வரலாற்றில் இல்லாத ஒன்றாக, பொதுமக்களின் வசதிக்காக வரும் செப்டம்பர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
நேரில் சென்று மேற்கொள்ள வேண்டிய அவசரப் பரிவர்த்தனைகளை செப்டம்பர் 27-க்குள் முடித்துக் கொள்ளவும், பிற பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் சேவைகளை பயன்படுத்தவும் வங்கிகள் கோரியிருக்கிறது. அதேபோல் வேலைநிறுத்த நாட்களிலும் ஏடிஎம்களில் போதுமான ரொக்கப் பணம் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. வங்கி அரைவருட கணக்கு முடிக்கும் நாள் செப்டம்பர் 30ம் தேதி என்பதால் அனைத்து பணிகளும் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தொடர்ந்து வங்கி சேவைகள் பாதிப்பது ஒருபுறம் எனில், வங்கிகளின் வழக்கமான பணிகளுமே இப்போது பாதிக்கும் வகையில் வேலை நிறுத்தம் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
