பொதுவெளியில் சொல்ல முடியவில்லை.. ராஜ்யசபா தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஜெயா பச்சன் ஆவேசம்
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர்களை மரியாதை குறைவாக நடத்தும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கோர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் கோரியுள்ளார். உறுப்பினர்களை மரியாதை குறைவாகப் பேசுகிறார் என்றும் ஜக்தீப் தன்கர் பயன்படுத்தும் வார்த்தைகளும் பேசும் விதமும் ஏற்க முடியாதவையாக இருப்பதாகவும் ஜெயா பச்சன் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பட்ஜெட் தொடர்பான விவாதம் கடந்த ஒருவாரமாக நடந்து வந்தது. நேற்று நடந்த விவாதத்தின் போது, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்பியான ஜெயா பச்சன் எழுந்து பேசினார். இதேபோல் பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்களும் அவையில் எழுந்து நின்று பேசினார்கள். ஜெயா பச்சன் உள்பட பல்வேறு எம்பிக்களுக்கு ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் பதில் அளித்தார். அப்போது அவையில் கடும் விவாதம் நடந்தது.

ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் ஜெயா பச்சனை நீங்கள் திரைப்பட நடிகையாக இருக்கலாம்; ஆனால்... என கடுமையாக பேசினார். இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபடைந்து கடும் அமளியில் ஈடுபட தொடங்கினார்கள். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது,
இது தொடர்பாக பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய ஜெயா பச்சன் எம்பி , "ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் உறுப்பினர்களை மரியாதை குறைவாகப் பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் பேசும் விதமும் ஏற்க முடியாதவையாக உள்ள. நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. பள்ளி மாணவர்களும் அல்ல. எங்களில் பலர் மூத்த குடிமக்கள் ஆவார்.
எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அவரது மைக்கை ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் அணைத்தார். அவர் எவ்வாறு அப்படி செய்யலாம்? எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அவர் அனுமதி அளித்திருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் வரம்பு மீறி பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் சொல்ல முடியாதவையாக உள்ளன. சில நேரங்களில் உங்களால் தொல்லையாக இருக்கிறது என்று எங்களை பார்த்து தெரிவிக்கிறார். உங்களுக்கு புத்தி குறைபாடு உள்ளது என்றும் சொல்கிறார்.
நீங்கள் திரைப்பட பிரபலமாக இருக்கலாம்; அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என என்னைப் பார்த்து ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். நான் 5வது முறை எம்பியாக உள்ளனேன். நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். தற்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசப்படும் முறை முன்பு இருந்தது இல்லை. என்னைப் பற்றி ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் பேசியதற்காக ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்"இவ்வாறு ஜெயாபச்சன் கூறினார்.












Click it and Unblock the Notifications