அப்பு.. அடுத்த பஞ்சாயத்து ரெடி... சமஸ்கிருதமே நவீன மொழிகளின் தாய்.. கொளுத்திப் போட்ட பிரதமர் மோடி!
டெல்லி: பல நவீன மொழிகளின் தாய் சமஸ்கிருதம்; உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று; அறிவியல், இலக்கணத்துக்காக சமஸ்கிருதம் போற்றப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி மன்கிபாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசியதாவது: அனைவருக்கும் உலக சம்ஸ்கிருத நாளை ஒட்டி நல்வாழ்த்துக்கள்.

நவீன மொழிகளின் தாய்: சம்ஸ்கிருதம் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். பல நவீன மொழிகளின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. சம்ஸ்கிருதம் அதன் தொன்மைக்காகவும், அதன் அறிவியல் மற்றும் இலக்கணத்திற்காகவும் அறியப்படுகிறது.
சமஸ்கிருதத்தில்தான் அத்தனையும்..: இந்தியாவின் தொன்மையான அறிவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யோகக்கலை, ஆயுர்வேதம், தத்துவம் போன்ற பாடங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள், இப்போது சம்ஸ்கிருதத்தை அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். பல நிறுவனங்களும் இந்தத் திசையில் மிகச் சிறந்த பணிகளைச் செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, சம்ஸ்கிருத மேம்பாட்டு அறக்கட்டளை, யோகக்கலைக்கு சம்ஸ்கிருதம், ஆயுர்வேதத்திற்கு சமஸ்கிருதம் மற்றும் புத்த மதத்திற்கு சம்ஸ்கிருதம் போன்ற பல படிப்புகளை அளிக்கிறது.
10 நாளில் சம்ஸ்கிருதம்: 'சம்ஸ்கிருத பாரதி' சம்ஸ்கிருதத்தை மக்களுக்குக் கற்பிக்கும் இயக்கத்தை நடத்துகிறது. இதில், 10 நாட்களில் சம்ஸ்கிருத உரையாடல் புரியலாம் என்ற முகாமில் பங்கேற்கலாம். இன்று மக்களிடையே சம்ஸ்கிருதம் குறித்த விழிப்புணர்வும், பெருமித உணர்வும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் பின்புலத்தில், நாட்டின் சிறப்பானதொரு பங்களிப்பும் உள்ளது.
சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்கள்: உதாரணமாக, 2020 ஆம் ஆண்டில் மூன்று சம்ஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டன. சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்களின் பல இணைப்புக் கல்லூரிகளும், நிறுவனங்களும் வெவ்வேறு நகரங்களில் இயங்கி வருகின்றன. ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்களில் சம்ஸ்கிருத மையங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
தாய்மொழி சிறப்பு: நமது தாய் மொழி தான் நம்மை நமது வேர்களுடன் இணைப்பது, நமது கலாச்சாரத்துடன் இணைப்பது, நமது பாரம்பரியத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஊடகம் என்பதை நீங்கள் பல நேரங்களில் கண்டிப்பாக அனுபவித்திருப்பீர்கள். தாய்மொழியுடன் நாம் இணையும் போது, நாம் இயல்பாகவே நமது கலாச்சாரத்துடன் இணைகிறோம். நமது நற்பண்புகளுடன் இணைகிறோம். பாரம்பரியத்துடன் இணைகிறோம், பண்டைய மகத்தான மாட்சிமையுடன் இணைகிறோம். இந்தியாவின் மற்றொரு தாய்மொழி பெருமைமிக்க தெலுங்கு மொழி. ஆகஸ்ட் 29-ம் தேதி தெலுங்கு தினம் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் இனிய தெலுங்கு தின நல்வாழ்த்துக்கள்.
தெலுங்கு மொழி சிறப்பு: தெலுங்கு மொழியின் இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தில் இந்திய கலாச்சாரத்தின் பல விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மறைந்துள்ளன. தெலுங்கின் இந்த பாரம்பரியத்தின் பலனை நாடு முழுவதும் பெறுவதை உறுதி செய்வதற்கான பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications