1, 2 இல்ல.. மொத்தமா 5 மன்னிப்பு கடிதங்கள் எழுதிய சாவர்க்கர்! உண்மையை ஒப்புக்கொண்ட கொள்ளுப்பேரன்!
டெல்லி: பாஜகவின் போற்றுதலுக்கு உரிய தலைவர்களில் மிக முக்கியமானவரான சாவர்க்கர், பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை கொடுத்திருப்பதாக அவரது கொள்ளுப்பேரன் புனே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
புனேவில் உள்ள சிறப்பு எம்.பி./எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்ளுப்பேரன் சத்யகி சாவர்க்கர் இந்த வாக்குமூலத்தை கொடுத்திருக்கிறார்.

சாவர்க்கர் பேரனின் வாக்குமூலம்
அந்தமான் செல்லுலார் சிறையில் இருந்தபோது, சாவர்க்கர் 5 முறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கருணை மனுக்களை தாக்கல் செய்தது உண்மைதான் என்று சத்யகி ஒப்புக்கொண்டார். சாவர்க்கர் மட்டுமின்றி, அந்த காலத்தில் சிறையில் இருந்த பல அரசியல் கைதிகளும் இதே போன்ற மனுக்களை அனுப்பியுள்ளனர் என்று அவர் கூறினார்.
பசு தெய்வமா?
அதேபோல பசுவை தெய்வமாக வணங்க வேண்டுமா? என்பது குறித்து சாவர்க்கரின் பார்வை என்ன என்பதையும் சத்யகி விவரித்திருக்கிறார். அதாவது, சாவர்க்கர் பசுவை ஒருபோதும் கடவுளாக கருதவில்லை, மாறாக அதை ஒரு பயனுள்ள விலங்கு என்று மட்டுமே குறிப்பிட்டார் என்ற உண்மையை சத்யகி நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின்போது இந்திய இளைஞர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர வேண்டும் என்று சாவர்க்கர் வேண்டுகோள் விடுத்ததை சத்யகி உறுதிப்படுத்தினார்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர வேண்டுகோள்
ஆனால், இந்திய இளைஞர்கள் நவீன ஆயுதங்களைக் கையாளவும், ராணுவப் பயிற்சியைப் பெறவும் இது ஒரு வாய்ப்பு என்று நினைத்துதான் சாவர்க்கர் அப்படி சொன்னதாக சத்யகி கூறியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டைப் பாதுகாக்க ஏற்கனவே பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் தேவைப்படுவார்கள் என்ற தொலைநோக்கு பார்வையிலேயே சாவர்க்கர் இப்படி வேண்டுகோள் விடுத்ததாக சத்யகி கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை
இதுதவிர, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில் சாவர்க்கரின் பார்வை என்ன என்பதையும் சத்யகி சாவர்க்கர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். அதாவது, இரு நாடு கொள்கையை (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை) சாவர்க்கர் தான் முதலில் கொண்டு வந்தார் என்ற வாதத்தை சத்யகி மறுத்தார். இந்தக் கொள்கையை முதலில் முன்மொழிந்தவர் சர் சையது அகமது கான் என்றும், சாவர்க்கர் அந்தப் பிரச்சனை குறித்த எதார்த்தமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எதையும் எழுதவில்லை என்று வலதுசாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில், சாவர்க்கரின் கொள்ளு பேரன் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பது, வலதுசாரிகளுக்கு நோஸ் கட்டாக பார்க்கப்படுகிறது.
வழக்கின் பின்னணி
கடந்த 2023-ஆம் ஆண்டு லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, அங்கு ஆற்றிய ஒரு உரையில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார். "சாவர்க்கர் மற்றும் அவரது 5-6 நண்பர்கள் சேர்ந்து ஒரு முஸ்லிம் நபரை அடித்ததாகவும், அது சாவர்க்கருக்கு மகிழ்ச்சியைத் தந்ததாகவும்" ராகுல் காந்தி பேசியதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு சாவர்க்கரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, சாவர்க்கரின் கொள்ளுப்பேரன் சத்யகி சாவர்க்கர் புனே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, புகார்தாரரான சத்யகி சாவர்க்கரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு சத்யகி, மேற்குறிப்பிட்ட விஷயங்களை பதிலாக கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications