3 மாதத்துக்கு மேலான கர்ப்பிணிகள் பணிபுரிய தகுதியற்றவர்கள்.. 'சர்ச்சை' உத்தரவை வாபஸ் வாங்கிய எஸ்பிஐ
டெல்லி: 3 மாதத்துக்கு மேலான கர்ப்பிணிகள் பணிபுரிவதற்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என பாரத ஸ்டேட் வங்கி( எஸ் பி ஐ) புதிய விதிமுறைகள் வெளியிட்டது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் வந்த நிலையில் எஸ் பி ஐ இந்த உத்தரவை வாபஸ் வாங்கியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி( எஸ் பி ஐ). இந்த எஸ் பி ஐ அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்தான் தற்போது சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.

கர்ப்பிணிகள் பணிக்கு தகுதியற்றவர்கள்
அதாவது 3 மாதத்துக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எஸ் பி ஐ யில் புதிதாக பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று எஸ் பி ஐ அறிவித்துள்ளது. இந்த கர்ப்பிணிகள் தற்காலிகமாக தகுதியற்றவராக கருதப்படுவார்கள் என்றும் குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்குள் அவர்கள் பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எஸ் பி ஐ வெளியிட்டுள்ள விதிகளில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன எஸ் பி ஐ.யின் இந்த விதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு டெல்லி மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 3 மாத கர்ப்பிணிகளை பணியில் சேரவிடாமல் தடுத்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மகப்பேறு சலுகைகளுக்கு முரணானது
இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எஸ்பிஐயின் நடவடிக்கை பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது, இது சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மகப்பேறு சலுகைகளை பாதிக்கும்.இந்த எதிர்ப்பை திரும்பப் பெறக் கோரி எஸ்.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது மிகவும் தீவிரமான விஷயம்.ஏனெனில் இது சமூக பாதுகாப்பு கோட், 2020 இன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு சலுகைகளுக்கு முரணானது.

எஸ் பி ஐ கூறுவது என்ன?
இந்த வழிகாட்டுதல்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதன் பின்னணியில் உள்ள செயல்முறையை விளக்குமாறும், அவற்றை அங்கீகரித்த அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடுமாறும் விளக்கம் கேட்டுள்ளதாக ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார். இது தவிர எஸ்.பி.ஐ.க்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு பாலின சமன்பாட்டுக்கு எதிரானது என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

உத்தரவை வாபஸ் வாங்கிய எஸ்.பி.ஐ
மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் எஸ்.பி.ஐ.க்கு எதிராக பொங்கியெழுந்தார். இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி நீண்ட நேரம் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் கருவுற்று 3 மாதங்கள் மேலேயான பெண்களுக்கு பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை வாபஸ் பெற்றது எஸ்.பி.ஐ வங்கி. எதிர்ப்பு வலுத்ததால் எஸ்.பி.ஐ உத்தரவை வாபஸ் வாங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications