மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11 வரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஜூலை 11-ந் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சிவசேனா கட்சியில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அணிவகுத்துள்ளனர். கடந்த பல நாட்களாக குஜராத் மற்றும் அஸ்ஸாமில் இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முகாமிட்டுள்ளனர்.

இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தங்களது பலத்தை காட்டும் வகையில் போராட்டங்களை நடத்துகின்றனர். சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில் அரசுக்கும் கட்சித் தலைமைக்கும் எதிராக போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகரை சிவசேனா கேட்டுக் கொண்டது. இதனடிப்படையில் 16 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் 16 எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது. இவ்வழக்கில் உத்தவ் தாக்கரே அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றுவிட்டதாகவும் இதனால் மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா அரசு, மகாராஷ்டிரா துணை சபாநாயகர், சட்டசபை உட்பட அனைத்து தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. மேலும் ஜூலை 11-ந் தேதி வரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications