“அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142.. ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுண்டு!” ஜகதீப் தன்கர் கொந்தளிப்பு
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு, உச்சநீதிமன்றம் சமீபத்தில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142ஐ பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இந்த 142வது சட்டப்பிரிவை ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுண்டு என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் விமர்சித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு இந்த சட்டம் 24*7 நேரமும் கிடைக்கும் ஆயுதம் போல இருக்கிறது என்று எனவும் ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
பல்கலைக்கழகத்திற்கு வேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கே இருக்கிறது என்பது உட்பட பல்கலைக்கழகங்கள் தொடர்பாக 10 மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த மசோதாக்கள் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் ஓராண்டுக்கும் மேலாக இந்த மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இப்படி இருக்கையில், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
மத்திய அரசுக்கு பின்னடைவு
வழக்கு விசாரணை முடிந்து, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் விஷயம் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. அதாவது மசோதாக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் 142ஐ பயன்படுத்தி நீதிமன்றமே ஒப்புதல் அளிப்பதாகவும், மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்க 3 மாதங்கள் கால அவகாசத்தையும் கொடுத்திருக்கிறது. ஆளுநருக்கு கால அவகாசம் வழங்கியிருந்ததும், நீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருந்ததும் மத்திய அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஆளுநருக்கு மட்டுமல்லாது குடியரசுத் தலைவருக்கும் இந்த 3 மாதம் என்கிற காலக்கெடு பொருந்தும் என நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும் குடியரசுத் தலைவர் நடவடிக்கைகள் நீதிமன்றக் கண்காணிப்புக்கு உட்பட்டவை என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதா ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால் தாமதமாகிவிடக்கூடாது. இதனால் மக்களாட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
அணுகுண்டு
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் விமர்சனம் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, "நீங்கள் குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடக்கூடாது. அது ஜனநாயக முறையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142 என்பது ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணுகுண்டை போல இருக்கிறது. இது நீதிமன்றத்திற்கு 24*7 நேரமும் கிடைக்கும் ஆயுதம் போல இருக்கிறது.
தன்கரின் குற்றச்சாட்டு
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 14-15ம் தேதி நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் விசாரணை மெத்தனமாக இருக்கிறது. இதுவே சாதாரண நபர் ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்டிருந்தால் விவகாரம் வேறு மாதிரியாக வெடித்திருக்கும். இந்தியாவில் குடியரசுத் தலைவர் மீதும் ஆளுநர் மீதும் மட்டும்தான் வழக்குப்பதிவு செய்ய முடியாது. ஆனால் நீதிபதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய தயங்குவது ஏன்?
நீதிமன்றம் சட்டங்களை எழுதுகிறது. அதே நேரம் நிர்வாகத்தையும் செய்கிறது. ஆனால் அதற்கு எந்த பொறுப்பும் கிடையாது. இது ஜனநாயகத்திற்கும் மிகவும் ஆபத்தானது" என்று தன்கர் விமர்சித்திருக்கிறார்.
இப்போது மட்டும் கேள்வி ஏன்?
உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டம் 142ஐ பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில், மசூதி அமைந்திருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தமானது என்று நீதிமன்றம் 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி அறிவித்திருந்தது. அப்போதெல்லாம் இந்த சட்டப்பிரிவு பற்றி கேள்வி எழுப்பாத மத்திய அரசு தரப்பு, மாநில உரிமைகளுக்காக இச்சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டபோது மட்டும் கேள்வி கேட்பது ஏன் என்று சமூக விமர்சகர்கள் கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications