புல்டோசர் ட்ரீட்மெண்ட்.. பாக்., தூதரகத்தின் முன்பகுதியை இடித்த டெல்லி அதிகாரிகள்.. பழிக்கு பழி
டெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தின் கட்டடத்தின் முன்புறம் உள்ள ஒரு பகுதியை இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து அகற்றியதோடு, அங்கிருந்த இரும்பு தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தினர். பாகிஸ்தானில் அத்துமீறி செயல்படும் அந்த நாட்டை கண்டிக்கும் வகையில் பழிக்கு பழியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் காஷ்மீர் தான். நமக்கு சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்து கொண்டு அவ்வப்போது பயங்கரவாதிகளை வைத்து மிரட்டி வருகிறது. இதனால் தான் பாகிஸ்தானுடன், நம் நாட்டுக்கு சுமூகமான உறவு இல்லை.
இருப்பினும் கூட டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது. டெல்லியின் தெற்கு பகுதியில் சானக்யாபுரி என்ற இடத்தில் பாகிஸ்தான் தூதரகம் உள்ளது. இங்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று காலையில் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். பாகிஸ்தான் தூதரகத்தின் ஒரு பகுதியை புல்டோசர் கொண்டு இடித்து அகற்றினர். தூதரக அலுவலகத்திற்கு வெளியே பாஸ்போர்ட், விசாவிற்காக வரிசையில் நிற்கும் இடத்தில் ஏற்படுத்தப்பட்டு இருந்த கட்டமைப்புகளை இடித்து அகற்றினர். இரும்பு தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டது. அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பொது இடத்தை ஆக்கிரமித்து தற்காலிகமாக கூடாரம் அமைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது பழிக்கு பழியாக எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் முன்பு இருந்த பேரிகார்டுகள் மற்றும் வாகன நிறுத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டு இருந்த கம்பங்கள் அகற்றப்பட்டது. இதற்கு பதிலடியாக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
