இந்தியா வந்த கையோடு அஜித் தோவலை சந்தித்த ஷேக் ஹசீனா! லண்டன் பறக்க திட்டம்?
டெல்லி: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஹசீனாவை சந்தித்து பேசியிருக்கிறார். அதேபோல நிலைமை குறித்து பிரதமரிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விரைவில் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது. அதுவரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மாணவர் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.
இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தைவிட்டு தப்பியிருக்கிறார். அங்கிருந்து உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் ஹசீனா தரையிறங்கினார்.
இதனையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் அவர் சந்தித்திருக்கிறார். மறுபுறம் பங்களாதேஷின் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இச்சூழலில் ஹசீனாவை பிரதமர் மோடி சந்திப்பாரா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல ஹசீனா இங்கிருந்து லண்டன் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவரை இந்தியாவில் அவர் அரசியல் தஞ்சம் கோருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications