சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் நலனும் முக்கியம்.. உலக மனநல தினத்தில் கைகோர்க்கும் 6 அமைப்புகள்
டெல்லி: நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை குணப்படுத்தக்கூடிய மருத்துவர்கள், தங்களுக்கு ஏற்படக்கூடிய கடுமையான மன அழுத்தத்தை போக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக புதிய திட்டத்தை 6 அமைப்புகள் சேர்த்து முன்னெடுத்துள்ளன. உலக மனநல தினத்தை முன்னிட்டு இந்த முன் முயற்சி தொடங்கப்பட உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆறு அமைப்புகள் இணைந்து புதிய முயற்சியைத் தொடங்குகின்றன. 'Humanising Medicine India Initiative' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், உலக மன நல தினமான நாளை (அக்டோபர் 10) தொடங்கப்பட உள்ளது.

மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண
இந்த முன் முயற்சியில் இந்திய மனநலக் கூட்டமைப்பு, இந்திய மனநல மருத்துவ சங்கம், இந்திய மனநல மருத்துவ ஆசிரியர்கள் அமைப்பு, உலக மனநல மருத்துவ சங்கத்தின் மண்டலம் 15, இங்கிலாந்தின் டெர்பிஷையர் ஹெல்த்கேர் NHS அறக்கட்டளை மற்றும் ஆஷா கேரளா ஆகிய ஆறு அமைப்புகள் இணைந்துள்ளன.
நோயாளிகளின் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் மருத்துவர்கள் பலர், தங்களுக்கான மனநல உதவியை நாடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். சமூகப் பார்வை மற்றும் தொழில்முறை மதிப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சமே இந்த இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனை மாற்றும் வகையில், மருத்துவர்கள் தங்களின் மனநலச் சவால்கள், மன அழுத்தம், துயரம் மற்றும் குடும்பப் பராமரிப்புச் சுமைகள் குறித்து எவ்விதத் தயக்கமுமின்றிப் பேசுவதற்கான சூழலை உருவாக்கும் விதமாக இந்த திட்டம் இருக்கும்.
இணையவழிக் கருத்தரங்குகள்
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவர்களின் அனுபவங்கள் மற்றும் மனநல உதவிகளை நாடுவதில் உள்ள தடைகள் குறித்து தேசிய அளவிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது. மேலும், மருத்துவர்களின் நலவாழ்வை மையமாகக் கொண்டு மூன்று இணையவழிக் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. 2027 ஜனவரியில் மதுரையில் நடைபெறவுள்ள இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில், நேரடி பயிலரங்குடன் இந்த முயற்சி நிறைவடைய உள்ளது.
2 பேரில் ஒருவருக்கு மனச்சோர்வு
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, இளநிலை மருத்துவ மாணவர்களில் சுமார் இருவரில் ஒருவருக்கு மனச்சோர்வு அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. மற்றொரு ஆய்வில், மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களில் 30.1% பேருக்கு மனச்சோர்வு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், 16.7% பேர் தற்கொலை எண்ணங்களை எதிர்கொண்டதாகவும், 90%-க்கும் அதிகமானோர் ஏதேனும் ஒரு அளவில் பணிச்சோர்வை அனுபவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தங்களது மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி நாடுவது அவர்களின் தொழில்முறைத் திறனைக் குறைப்பதல்ல. மாறாக, அவர்களுக்கும் ஆதரவும், பராமரிப்பும் அவசியம் என்பதை உணர்த்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
