அப்படிப்போடு.. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை வருது புதிய சட்டம்.. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு
டெல்லி: நம்மகிட்ட எது இருந்தாலும் பறித்துவிடுவார்கள். ஆனால் யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்விதான். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதாவது என்பார்கள். அதனால் படிப்புடன் நம் திறனையும், வெளி உலக அனுபவமும் தெரிந்தால் தான் எதிலும் தடம் பதிக்க முடியும். இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 6 ஆம் வகுப்பு, 7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் கல்வி (Skill Education) கட்டாயம் என்று அறிவித்துள்ளனர். இதன் மூலம் மற்ற பாடங்களை போல திறன் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெறவுள்ளது.
நொடிக்கு நொடி அப்டேட்டாகி கொண்டிருக்கும் ஏஐ யுகத்தில் இருக்கிறோம். கல்வி என்பது மிகவும் முக்கியமானது. தற்போது பள்ளிக்கே செல்லாமல் ஹோம் ஸ்கூலிங்கில் கற்குமளவுக்கு காலம் மாறிவிட்டது. அதனால் மாணவர்கள் பாடத்திட்டத்தை தாண்டி கூடுதலாக கற்க வேண்டியது கட்டாயம். இதன் காரணமாக பள்ளிகளில் பாடத்திட்டத்தை கடந்து கூடுதல் திறன் பயிற்சி வழங்குவது அதிகரித்து வருகிறது.

திறன் கல்வி
விளையாட்டு, இசை, தற்காப்பு பயிற்சிகள் அதிகம் வழங்கப்படுகின்றன. இதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் கல்வியாண்டில் (2026-27) இருந்து, 6 - 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திறன் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்தே பயிற்சி வழங்கப்படவுள்ளது.
மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதில் மாணவர்களின் கல்வி அறிவுடன், அவர்களின் செயல் அறிவை ஊக்குவிப்பதை திட்டமாக வைத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் சிபிஎஸ்இ பள்ளிகளில் திறன் கல்வியை கட்டயமாக்கியுள்ளனர். இதையடுத்து சிபிஎஸ்இ பள்ளிகளில் இனி 6, 7, 8 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் திறன் கல்வியும் ஒரு பாடமாக இருக்கும்.
ஏஐ டு கைவினை பொருட்கள்
இதில் மாணவர்களுக்கு கல்வி கடந்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். ஏஐ, ஐடி கோடிங், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், தோட்டம் அமைத்தல், களிமண் வேலைப்பாடுகள் போன்றவை குறித்து சொல்லிக் கொடுக்கப்படும். முதல்கட்டமாக இந்த ஜனவரி மாதத்தில் இருந்தே ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில்," மாணவர்கள் பாடத்திட்டத்தை தவிர எதையும் சிந்திப்பதில்லை. வீட்டிற்கு வந்தாலும் செல்போன், டிவி ஆகியவற்றில் மூழ்கிவிடுகிறார்கள். வெளி உலக அனுபவம் இல்லாமல் வளர்வதால், பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று பெற்றோர் கூறுகின்றனர். திறன் கல்வி மூலம் மாணவர்கள் பல விஷயங்களை கற்று கொள்ள முடியும். அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." என்றனர்.












Click it and Unblock the Notifications