"இந்திய ஜனநாயகத்தை உடைக்க சதி.." ஜார்ஜ் சோரஸ் மீது ஸ்மிருதி இரானி பரபர குற்றச்சாட்டு
"முதலில் இந்த ஜார்ஜ் சோரஸ் யார் என நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பேங்க் ஆப் இங்கிலாந்தை தனது சதி செயலால் முடக்கியவர்தான் இந்த ஜார்ஜ் சோரஸ். பிரிட்டனால் 'பொருளாதார போர் குற்றவாளி' எனக் குற்றம்சாட்டப்பட்டவர்"
டெல்லி: இந்திய ஜனநாயகத்தை உடைக்க அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் சதி செய்வதாகக் குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரை பொருளாதார போர்க் குற்றவாளி என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், இந்திய விவகாரத்தில் தலையிட முயன்ற பல அந்நிய சக்திகளை விரட்டியடித்த வரலாறு இந்தியர்களுக்கு உண்டு எனக் கூறிய ஸ்மிருதி இரானி, அதே பாணியில் ஜார்ஜ் சோரஸை விரட்டக் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, பாஜகவுடன் இணைந்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஜார்ஜ் சோரஸுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மூக்கை நுழைத்த ஜார்ஜ் சோரஸ்
இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி, பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை அளித்தது. இந்தியாவில் பெரும் புயலைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இணைத்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில், ஹங்கேரிய - அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, அதானியால் இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல், இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், இந்த பிரச்சினைக்குப் பிரதமர் மோடி பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஸ்மிருதி இரானி பதிலடி
இந்தியா குறித்து ஜார்ஜ் சோரஸ் தெரிவித்த கருத்து, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட சில அந்நிய சக்திகள் கடந்த காலங்களிலும் முயற்சித்துள்ளன. ஆனால் அவர்களை நாம் விரட்டி அடித்திருக்கிறோம். இந்த முறை ஜார்ஜ் சோரஸ் பெயரில் அந்நிய சக்தி இந்தியாவுக்குள் நுழைந்து வாலாட்ட பார்க்கிறது. அதற்கு அரசியல் வித்தியாசங்களைக் கடந்து இந்தியர்கள் அனைவரும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

"பொருளாதார போர்க் குற்றவாளி"
இதனிடையே, ஸ்மிருதி இரானி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "முதலில் இந்த ஜார்ஜ் சோரஸ் யார் என நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பேங்க் ஆப் இங்கிலாந்தைத் தனது சதி செயலால் முடக்கியவர்தான் இந்த ஜார்ஜ் சோரஸ். எனவே, பிரிட்டனால் 'பொருளாதார போர் குற்றவாளி' எனக் குற்றம்சாட்டப்பட்டவர். தற்போது அந்த தீய சக்தி, இந்திய ஜனநாயகத்தை ஆட்டிப்பார்க்கும் நோக்கில் களம் இறங்கியிருக்கிறது. இதுபோன்ற அந்நிய சக்திகள் பிற நாடுகளில் தங்களுக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள்" என ஸ்மிருதி இரானி கூறினார்.

காங்கிரஸ் ஆவேசம்
இந்நிலையில், ஜார்ஜ் சோரஸின் கருத்துக்குப் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆவேசமாகப் பதிலளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அதானி விவகாரம் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா என்பது முழுக்க முழுக்க காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் மற்றும் எங்கள் தேர்தல் முறையுடன் தொடர்புடையது. இதில் ஜார்ஜ் சோரஸ் தலையிடுவதற்கும், கருத்து தெரிவிக்கவும் ஒன்றுமில்லை. இந்தியாவின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்க ஜார்ஜ் சோரஸ் போன்றவர்களை அனுமதிக்கக் கூடாது என்பது நேரு கொள்கைகளில் ஒன்று" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications