மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் சோனம் வாங்சுக் + கரப்பான் பூச்சி கட்சி கூட்டணி! பரபரக்கும் டெல்லி
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய நேற்று வரை கரப்பான் பூச்சி கட்சி கெடு விதித்திருந்தது. இருப்பினும், அவர் ராஜினாமா செய்யாத நிலையில், மிக பெரிய போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி கட்சி ரெடியாகி வருகிறது. இதற்கிடையே அக்டோபர் 2ம் தேதி தொடங்கும் இந்த போராட்டத்திற்கு சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் குளறுபடிகளை கண்டித்தும் அதற்கு பொறுப்பேற்க கூறியும் கடந்த ஜூன் மாதம் மிக பெரிய போராட்டம் டெல்லியில் வெடித்தது அனைவருக்கும் நினைவு இருக்கும். கரப்பான் பூச்சி கட்சி நடத்திய ந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கும் கலந்து கொண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரப்பான் பூச்சி கட்சி
இதன் காரணமாக அரசுக்கு நாளுக்கு நாள் அழுத்தம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் சூழலும் உருவானது. இதற்கிடையே இப்போது மீண்டும் கரப்பான் பூச்சி கட்சியும் சோனம் வாங்சுக்கும் போராட்ட களத்திற்கு திரும்பவுள்ளனர்.
வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம், மீண்டும் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சில முடிவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஒருமித்த முடிவை எடுக்கவில்லை என தகவல் வெளியானது. தேர்தல் ஆணையர்கள் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக செய்தி வெளியானது. இது வழக்கமான ஆலோசனை தான் என்றும் அனைத்து முடிவுகளும் ஒருமித்த ஒப்புதலுடனேயே எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறினாலும் இதை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டது.
தலைமை தேர்தல் ஆணையர்
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய நேற்று வரை கெடு விதித்திருந்தது. அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் அக்டோபர் 2ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். மும்பையில் தொடங்கும் போராட்டம் நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
போராட்டம்
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்துள்ளார். தேர்தல் நடைமுறையிலும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் எந்த முயற்சிக்கும் ஆதரவு அளிப்பதாகக் கூறினார். இது தொடர்பாக அவர், "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தை நிச்சயமாக ஆதரிக்கிறேன். நாட்டில் பொறுப்புணர்வை மேம்படுத்தும் எந்த முயற்சிக்கும் நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.
ஆதரவு
ஒவ்வொரு போராட்டத்திலும் தான் நேரடியாக கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். ஒரு இயக்கம் தானாக வளர்ந்து, மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதையே விரும்புவதாகவும் வாங்சுக் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைமுறை ஜனநாயக நாட்டின் மிக முக்கியமான ஒன்று என்று குறிப்பிட்ட அவர், "தேர்தல் நடைமுறையே சீர்குலைந்துவிட்டால், ஜனநாயகத்தில் எதுவும் எஞ்சி இருக்காது" எனவும் சாடினார்.
அரசுகள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக லடாக்கிற்கு 6வது அட்டவணை தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை குறிப்பிட்ட வாங்சுக், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் என்பதால், அந்த நாள் மிகவும் முக்கியமானது என்று கூறிய வாங்சுக், மக்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய காந்தியின் அணுகுமுறை பலருக்கும் உத்வேகம் அளித்ததாகவும் கட்சி தாண்டி மக்கள் போராட்டத்தில் அனைவருக்கும் ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
