"பொய் மூட்டை.." சோனியா எழுதிய புத்தகத்தால் நரசிம்மராவ் பேரன் கடும் அதிருப்தி
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய புத்தகம் இப்போது நாடு முழுக்க விவாதமாகியுள்ளது. இதற்கிடையே அந்த புத்தகத்தை 'பொய்களின் மூட்டை' என்று முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் பேரன் என்.வி. சுபாஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடித்தளம் அமைத்த நரசிம்ம ராவின் பங்களிப்பை சோனியா காந்தி வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இப்போது Belonging: A Journey of Love என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இத்தாலியில் பிறந்த ஒரு சாதாரண பெண் இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தின் தலைவியாக மாறிய வாழ்க்கை பயணத்தை அவர் இதில் விவரித்துள்ளார்.

சோனியா புத்தகம்
கடந்த 10ம் தேதி வெளியான இந்த புத்தகத்தில் அவர், ராஜீவ் காந்தியுடனான தனது காதல் மற்றும் திருமணம், இந்திரா காந்தியுடனான உறவு, கணவரின் படுகொலைக்கு பிந்தைய துயரங்கள் என பல விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். இந்த புத்தகத்திற்கு நாடு முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் இந்த புத்தகத்தை சுற்றி விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கிடையே பாஜகவின் தெலுங்கானா மாநில பிரிவின் தலைமை செய்தி தொடர்பாளராக உள்ளவர் என்.வி. சுபாஷ் இந்த புத்தகம் குறித்து சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நரசிம்ம ராவ் பேரன்
முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் பேரனான இவர், சோனியா காந்தியின் புத்தகத்தை 'பொய்களின் மூட்டை' என்று விமர்சித்துள்ளார். மேலும், சோனியா காந்தியின் புத்தகத்தில் நரசிம்ம ராவ் இடம்பெறாதது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கும் நாட்டுக்கும் நரசிம்ம ராவ் செய்த பங்களிப்புகளை சோனியா காந்தி திட்டமிட்டே தவிர்த்திருப்பார் என்று எதிர்பார்த்தே இருந்ததாகவும் சுபாஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், "நேரு குடும்பத்தினர் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, கட்சியில் இருந்த மற்ற தலைவர்களின் பங்களிப்புகளை புறக்கணிப்பதும், அவர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதும் வழக்கமாகிவிட்டது. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என்றும் தென்னிந்தியாவை சேர்ந்த முதல் பிரதமர் என்றும் நரசிம்ம ராவ் உரிய அங்கீகாரம் பெற வேண்டியவர். நரசிம்ம ராவ் இல்லாமல் இந்தியா அந்த பொருளாதார சீர்திருத்தங்களை சாதித்திருக்க முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
புறக்கணித்துவிட்டார்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக குறிப்பிட்ட சுபாஷ், அவரை நிதியமைச்சராக தேர்வு செய்ததே நரசிம்ம ராவ்தான் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தபோதும், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நரசிம்ம ராவ் உறுதுணையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி பிளவுபடாமல் இருப்பதற்கும் நரசிம்ம ராவ் உதவினார் என்று குறிப்பிட்ட அவர், கட்சிக்கும் நாட்டுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை சோனியா காந்தி ஏன் அங்கீகரிக்க மறுக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும், "நரசிம்ம ராவின் அரசியல் மற்றும் நிர்வாக பங்களிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு தான் அங்கீகரித்தது. குறிப்பாக, 2024 பிப்ரவரியில் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சோனியா காந்தியின் புத்தகத்தில் நேரு குடும்பத்தினர் ஆட்சியில் இருந்த காலகட்டம் தொடர்பாக, குறிப்பாக எமர்ஜென்சி குறித்தும் வரலாற்று பிழைகள் உள்ளன. புத்தகத்தைப் படித்தபோது பல முரண்பாடுகளையும் ஒன்றுக்கொன்று பொருந்தாத கருத்துகளையும் காண முடிந்தது
ஏகப்பட்ட முரண்கள்
இதற்கு உதாரணமாக, தனது கணவர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார். ஆனால், இன்னொரு பக்கம் அவரே தனது குழந்தைகளை அரசியலின் முக்கிய பொறுப்புகளுக்கு முன்னிறுத்துகிறார்.. எதிர்காலத்தில் தனது பேரக்குழந்தைகளையும் அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சி எடுப்பார். இந்த முரண்பாடுகளை என்னவென்று சொல்வது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
