"மூவரும் ராஜினாமா செய்ய தயார்.." பொங்கிய சோனியா காந்தி! செயற்குழு கூட்டத்தில் அடுத்து நடந்தது என்ன
டெல்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இது தலைமை மாற்றம் தேவை என்றே பேச்சைக் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் உருவாக்கி உள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே அதிருப்தி தலைவர்களான ஜி23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத் வீட்டில் தீவிர ஆலோசனை நடத்தினர். இதில் தேர்தல் முடிவுகள், தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

செயற்குழு கூட்டம்
இந்தச் சூழலில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கக் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் 4 மணி நேரம் நீட்டித்தது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி. மல்லிகார்ஜுன் கார்கே, அம்பிகா சோனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ராஜினாமா செய்ய தயார்
இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை குறித்து இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, "கட்சியினர் விருப்பப்பட்டால் நாங்கள் மூவரும் (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா) ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இதைக் காங்கிரஸ் செயற்குழு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலைச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட காங். மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுதி செய்துள்ளார்,

காங்கிரஸ்
முன்னதாக நேற்று (மார்ச் 12) 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பொறுப்பேற்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பதவி விலக உள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இத்தகவலைக் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் உடனடியாக மறுத்திருந்தார். இது தொடர்பாக அக்கட்சியின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகி உள்ள செய்தி முற்றிலும் தவறானது" என்று குறிப்பிட்டிருந்தார்.

பதவிகள்
ராகுல் காந்தி கடந்த 2017இல் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், கடந்த 2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகி இருந்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக இரண்டு ஆண்டுகளாகச் சோனியா காந்தி இருந்து வருகிறார். அதேபோல காங்கிரஸ் பொதுச்செயலாளராகக் கடந்த 2020 செப் மாதம் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5 மாநில தேர்தல்
5 மாநில தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் கட்சி இழந்தது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியால் வெறும் 18 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேபோல கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வீழ்த்த முடியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வாக்கு வங்கியும் கடுமையாகச் சரிந்துள்ளது.












Click it and Unblock the Notifications