கொரோனா 3ஆம் அலை.. இதுவரை இல்லாத கொடூரமான பாதிப்பு.. தென் ஆப்பிரிக்கா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன
டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா 3ஆம் அலை பாதிப்பு, 2ஆம் அலையைக் காட்டிலும் மோசமாக உள்ள நிலையில் இந்தியாவுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
Recommended Video
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா உலகின் எந்த நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.
ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவதைப் போலத் தோன்றினாலும், சில மாதங்களில் அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் தினசரி வைரஸ் பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்குகிறது.

பிரிட்டன்
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று பிரிட்டன். வளர்ந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிரிட்டனில் கூட வைரஸ் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய ஆல்பா கொரோனா வகையால் அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. சில மாதங்கள் குறைந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் டெல்டா கொரோனாவால் இப்போது அங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா
பிரிட்டன் மட்டுமில்லை எல்லா நாடுகளிலும் இதே நிலைதான். ஒவ்வொரு அலையிலும் வைரஸ் பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. தென் ஆப்பிரிக்கா இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. அங்குக் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முதல் கொரோனா அலை ஆகஸ்ட்டில் உச்சமடைந்தது. அப்போது தினசரி பாதிப்பு 12 ஆயிரம் வரை சென்றது.

கொரோனா 2ஆம் அலை
முதல் அலை குறைந்து, வைரஸ் பாதிப்பும் கட்டுக்குள் வந்தது. அதன் பிறகு பிரேசில் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட பீட்டா வகை கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தாண்டு ஜனவரி மாதம் அங்குத் தினசரி வைரஸ் பாதிப்பு 15 ஆயிரம் வரை சென்றது. அதன் பிறகு வழக்கம்போல வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியது. அத்துடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாகவே பலரும் கருதினர். அடுத்த சில பாதிங்களில் வைரஸ் பாதிப்பு மிக குறைவாகவே அங்கு இருந்தது.

3ஆம் அலையில் மோசமான பாதிப்பு
இருப்பினும், இப்போது இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா தென் ஆப்பிரிக்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. அங்கு முதல் இரண்டு அலையைக் காட்டிலும் மூன்றாம் அலையில் பாதிப்பு மோசமாக உள்ளது. மூன்றாம் அலை இன்னும் உச்சமடையாத நிலையில், அங்கு வைரஸ் பாதிப்பு 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் மூன்றாம் அலையில் பாதிப்பு எந்தளவு மோசமாக இருக்கும் என்பது இன்னும் சில வாரம் கழித்துத்தான் தெளிவாக தெரியும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கு எச்சரிக்கை
இது இந்தியாவுக்கு எச்சரிக்கையாகவே உள்ளது. நமது நாட்டில் மே மாதம் உச்சமடைந்த கொரோனா இப்போது கட்டுக்குள் வந்துவிட்டது. இந்திய வல்லுநர்கள் பலரும்கூட கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டாலும், அது இந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கூறி வருகின்றனர். இருப்பினும், கொரோனா வைரஸ் தொடர்ந்து மோசமாகப் பரவக் கூடிய வகையில் உருமாறிக் கொண்டே இருப்பதால், தென் ஆப்பிரிக்காவைப் போல நமக்கும் மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வேக்சின் பணிகள்
தென் ஆப்பிரிக்காவிலும் வேக்சின் பணிகள் மந்தமாகவே நடைபெறுகிறது. அங்கு இதுவரை 4.5% பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 0.81% பேருக்கு மட்டுமே வேக்சின் 2 டோஸ்களும் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 3ஆம் அலையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
|
கொரோனா வேக்சின்
கொரோனா தடுப்பூசிகள் வைரஸ் பாதிப்பைக் குறைக்கிறது. குறிப்பாக கொரோனா மரணங்களை வெகுவாக குறைக்கிறது. தற்போதுள்ள சூழலில் கொரோனா என்ற இந்த கொடிய நோயை வெல்ல வேக்சின்கள் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தவில்லை என்றால் மூன்றாம் அலையில் ஏற்படும் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்பதையே தென் ஆப்பிரிக்கா நமக்குக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications