அடுத்தடுத்த கொள்ளை- வடமாநில போலீஸை திணறடித்த இலங்கை 4 தமிழர்கள்! கூண்டோடு சிக்கிய 'தக் தக் கேங்'
டெல்லி: டெல்லி மற்றும் வடமாநிலங்களில் அடுத்தடுத்து பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட தக் தக் கேங் கூண்டோடு சிக்கியிருக்கிறது. டெல்லியை கலக்கிய தக் தக் கேங்கில் சிக்கிய 4 பேர் இலங்கை தமிழர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளைகளில் தக் தக் கேங் என்ற கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தக் தக் கேங்கை குறிவைத்து டெல்லி போலீசார் களமிறங்கினர். டெல்லி போலீஸ் அதிகாரிகள் செளம்யா மிஸ்ரா, ரூபீந்தர் கவுர், ராமந்தீப் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த தேடுதல் வேட்டையை நடத்தியது.

டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் நூதன முறைகளில் கொள்ளையடிப்பதை தக் தக் கேங் வாடிக்கையாக வைத்திருந்தது. குறிப்பாக கார்களின் கண்ணாடிகளை லாவகமாக திறப்பதில் இந்த கும்பல் கில்லாடியாக இருந்துள்ளது. டெல்லியில் பதுங்கி இருந்த இந்த கும்பலை லூதியான போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தது.
இந்த 4 பேரும் தமிழ் மொழியில் பேசியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் 4 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் இவர்களில் முருகன் என்பவரிடம் இருந்து மட்டும் ரூ46.50 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தக் தக் என்ற பெயரிலான இந்த குழு, சிறிய கொள்ளை சம்பவங்களில்தான் ஈடுபடுவதாக நினைத்தோம். ஆனால் மிகப் பெரிய கொள்ளைகளிலும் இந்த கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.
தக் தக் கேங்கை இந்த 4 பேரும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசாரிடம் இருந்து தப்பி வந்துள்ளனர். செல்போன்கள் மூலம் போலீசாரை பல நேரங்களில் திசைமாற்றி இருக்கின்றனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததாம். இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications