உச்சத்தில் பறக்கும் சர்க்கரை விலை! "பண்டிகை காலத்தில் மேலும் மோசமாகும்!" நேரடியாக எச்சரித்த வல்லுநர்
டெல்லி: இந்தியாவில் கடந்த சில வாரங்களாக சர்க்கரை விலை கடுமையாக உயரும் நிலையில், வரும் பண்டிகை காலத்தில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக வேளாண் பொருளாதார நிபுணர் பேராசிரியர் அசோக் குலாட்டி தெரிவித்துள்ளார். சர்க்கரை உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைவது மற்றும் எத்தனால் உற்பத்திக்கு கரும்பு திருப்பிவிடப்பட்டது ஆகியவையே சர்க்கரை விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என்று அசோக் கூறியுள்ளார்.
சர்க்கரை விலை சமீபத்திய காலங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களை வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், தற்போதைய சூழலில் நிலைமை சீராக வாய்ப்பு குறைவு என்றும் வரும் நாட்களிலும் விலையேற்றம் தொடரும் என்றும் பலரும் எச்சரித்து வருகிறார்கள்.

அசோக் குலாட்டி
இது தொடர்பாக வேளாண் பொருளாதார நிபுணர் பேராசிரியர் அசோக் குலாட்டி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இந்தியாவில் இந்தாண்டு சர்க்கரை உற்பத்தி சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அசோக் குலாட்டி தெரிவித்தார். மேலும், சர்க்கரை கையிருப்பும் கணிசமாக குறைந்துள்ளதாக கூறிய அவர், கையிருப்பு சுமார் 80 லட்சம் டன்னில் இருந்து 50 லட்சம் டன்னாக குறைந்துவிட்டதாக அவர் கூறினார்.
காரணங்கள்
அவர் மேலும் கூறுகையில், "சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கையிருப்பு சர்க்கரையை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், கரும்பின் ஒரு பகுதி எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கியது. உற்பத்தி ஏற்கனவே 10 சதவீதம் குறைந்துள்ள நிலையில், கரும்பை எத்தனால் உற்பத்திக்கு திருப்புவது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனால் சந்தையில் கிடைக்கும் சர்க்கரையின் அளவு மேலும் குறைந்துவிட்டது.
சர்க்கரை கையிருப்பு ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருந்த நிலையில், பற்றாக்குறை ஏற்படுவதற்கான அறிகுறிகளை அரசு பல மாதங்களுக்கு முன்பே அறிந்திருக்க வேண்டும். சர்க்கரை இறக்குமதியை நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பே அரசு அனுமதித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், கையிருப்பு மிக இந்தளவுக்கு மோசமாகும் முன்பே கூடுதல் சர்க்கரையை சந்தைக்கு கொண்டு வந்திருக்க முடியும்.
வரி அதிகம்
சர்க்கரையை இறக்குமதி செய்வது மட்டுமின்றி, உள்நாட்டில் சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்கு திருப்புவதற்கு பதிலாக.. தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எத்தனாலை கூட இறக்குமதி செய்திருக்கலாம்" என்றார்.
சர்க்கரைக்கு விதிக்கப்படும் 100 சதவீத இறக்குமதி வரியையும் அசோக் குலாட்டி விமர்சித்தார். இந்த அதிகப்படியான இறக்குமதி வரி காரணமாக, உள்நாட்டில் பற்றாக்குறை உருவானபோது நிலைமையை சமாளிக்க விரைவாக செயல்பட முடியாமல் போனதாக அவர் கூறினார். இந்தியாவின் சர்க்கரை துறையை அரசு அதிகமாக கட்டுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசு கட்டுப்பாடுகள்
அவர் மேலும், "கரும்பு விலை, சர்க்கரை ஆலையின் விலை, ஆலைகள் சர்க்கரையை சந்தைக்கு கொண்டு வரும் அளவு என பல்வேறு விஷயங்களை அரசு கட்டுப்படுத்துகிறது. இந்தத் துறையில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தும் நேரம் வந்துவிட்டது. சர்க்கரைத் துறையில் தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் தேவை. இந்த விலையேற்றம் இத்தோடு முடிவுக்கு வராது. வரும் பண்டிகை காலத்தில் சர்க்கரைக்கான தேவை அதிகரிக்க உள்ளதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. தாமதமாக இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை உடனடியாக சந்தைக்கு வர முடியாது என்பதால், பற்றாக்குறை மேலும் நீடிக்கலாம்" என்றார்.
என்ன செய்ய வேண்டும்
சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்திக்கு இடையே ஒரு சமநிலை வேண்டும் என்ற அசோக், இதற்கு பிரேசிலை உதாரணமாக காட்டினார். அங்கு சர்க்கரை விலை அதிகமாக இருந்தால் கரும்புகள் சர்க்கரை உற்பத்திக்கும், எத்தனால் விலை அதிகமாக இருந்தால் அதற்கும் கரும்புகள் திருப்பிவிடப்படும் என்றும் அந்த முறையை நாமும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
