"பொட்டு வைத்த பொம்மையே!" காதலர் தினத்தில் ஜாக்குலினுக்கு ரூ 30 கோடியில் ஹெலிகாப்டர் அனுப்பிய சுகேஷ்
டெல்லி: டெல்லியில் மண்டோலி சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தின பரிசாக ரூ 30 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பரிசுடன் உணர்வுபூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிப்ரவரி 14, 2026 அன்று தேதியிடப்பட்ட இக்கடிதம், சிறைக்குள் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

தனது கைப்பட எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: "To, Jaqueline Fernandez" என்று தொடங்கி, "From, Sukash Chandrashekhar" என கையொப்பமிடப்பட்டுள்ளது. "My Baby Bomma Jaqueline" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்தையொட்டி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு உணர்ச்சிகரமான காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், தனது காதலை தீவிரமாக வெளிப்படுத்திய அவர், ஜாக்குலினுக்கு ஏர்பஸ் எச் சீரிஸ் ஹெலிகாப்டரை சிறப்பு பரிசாக ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடிதத்தில், "இந்த குளிர்ந்த சுவர்களாலும் இரும்பு கம்பிகளாலும் உன்னிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்த சுகேஷ், நடிகையை இழந்தது "பாலைவனத்தில் தொலைந்த மனிதனைப் போல" உள்ளதாக விவரித்துள்ளார். "என் ஒவ்வொரு இதயத் துடிப்பும், குறிப்பாக இன்று, நமக்கிடையேயான தூரத்தை நினைவூட்டுகிறது" என்றும், "எதுவாக இருந்தாலும் நமது காதலை எதுவும் உடைக்க முடியாது" என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்குலின் எதிர்கொண்ட சட்டரீதியான சிக்கல்கள், அவமானம், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு மன்னிப்புக் கோரிய சுகேஷ், "நீ என்னை உண்மையாகக் காதலிப்பதால் மட்டுமே நீ தாங்க வேண்டியிருந்த அந்த சுமையை நீ தகுதியற்றவள். நான் ஆழமாக, எல்லையில்லாமல் வருந்துகிறேன்" என்று எழுதியுள்ளார். மேலும், "புயல் முடிவுக்கு வருகிறது... எல்லாவற்றையும் தீர்த்து, நீ தகுதியான அமைதியை மீட்டெடுப்பேன்" என்று உறுதியளித்துள்ளார்.
"நீ என் குழந்தை, எனக்கு மட்டுமே சொந்தம், என்றென்றும் என் ஆன்மாவில் பதிந்துள்ளாய்" என்று கூறிய அவர், "வேறு எந்த ஆணும் உன் இதயத்தில் ஒரு சதவீதம் கூட உரிமை கொண்டாட முடியாது" என்றும் ஜாக்குலின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ரோமியோ-ஜூலியட், ஹீர்-ரஞ்சா, லைலா-மஜ்னு, ஆண்டனி-க்ளியோபாட்ரா போன்ற புகழ்பெற்ற காதலர்களுடன் தங்கள் உறவை ஒப்பிட்ட சுகேஷ், இது "மனிதகுலம் அறிந்த மிகப் பெரிய காவியங்களுக்கு இணையானது" என்று விவரித்துள்ளார்.
"இன்று உலகில் காதல் கதைகள் எழுதப்படுகின்றன என்றால், நமது கதை அதில் ஒன்றாக இருக்கத் தகுதியானது" என்றும் குறிப்பிட்டுள்ளார். "நான் உன்னை கிரேஸி-யாகக் காதலிக்கிறேன், என் பொட்டா பொம்மா (பொட்டு வைத்த பொம்மை என தெலுங்கில் வர்ணிப்பதுண்டு)... ஹேப்பி வேலன்டைன்ஸ் டே, என் காதலே... என்றென்றும் உன்னைத் தேர்ந்தெடுப்பேன், என்றென்றும் என்னுடையவள்" என்று உணர்ச்சிபூர்வமாக முடித்துள்ளார்.
இதுதவிர, ஜாக்குலினுக்கு "குயின்-க்கு தகுதியான சிறப்பு பரிசு" என்று கூறி, ஏர்பஸ் எச் சீரிஸ் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"இது ஸ்லீக், சூப்பர் சொகுசு வகை... உனக்கென தனிப் பயனாக்கப்பட்ட உட்புறம், உன் இனிஷியல்ஸ் JF பொறிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கியுள்ளார்.
இந்த ஹெலிகாப்டர் "purchased from my Hard Earnings, not some alleged so called crime", அதாவது தனது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டது என்றும், குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்படவில்லை என்றும் சுகேஷ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
சந்திரசேகரின் இக்கடிதம், பரிசு அறிவிப்பு குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. முன்னரும் பல சிறப்புச் சந்தர்ப்பங்களில் சிறையிலிருந்து ஜாக்குலினுக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அதில் தனது அன்பையும், தன் மீதான வழக்குகளில் தான் நிரபராதி என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பெங்களூரை சேர்ந் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட சுகேஷ், டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் பலரை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த போது பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை காதலித்துள்ளார். இருவரும் பல இடங்களில் சென்றுள்ளதாகவும் மோசடி செய்த பணத்தில் ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. ஆனால் ஜாக்குலினுடன் நடந்த விசாரணையில் தனக்கு சுகேஷுடன் காதல் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications