நீட்: அதிமுக ஆட்சி கால மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி- புதிய மனு மீது விரைவில் விசாரணை

நீட் தேர்வு வழக்கில் அதிமுக ஆட்சிக் கால மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த புதிய மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்காக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நீட் நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவிலான இந்த நீட் நுழைவுத் தேர்வு வினாக்கள், மாநிலங்களில் பின்பற்றப்படும் கல்விமுறைகளில் மாறானது. இதனால் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராவது கடினமாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டு வருகிறது.

Supreme court allows to withdraw AIADMK Govts plea against NEET Exam

இதனால் 12-ம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக முடியாத விரக்தியில் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் வெல்ல முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி அதிமுக ஆட்சி காலத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிராகரிக்கப்பட்டது. மேலும் கடநத அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தற்போதைய தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை முதலில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மனு மீது விசாரணைகள் நடைபெற்றன. இந்த விசாரணைகளின் போது தமிழ்நாடு அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. தொடர்ந்து கால அவகாசம் கேட்பதால் தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அதிரடியாக அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவானது நீட் தேர்வு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; சமத்துவத்துக்கு எதிரானது என்ற வாதங்களைக் கொண்டதாக தாக்கல் செய்யப்பட்டது. அப்புதிய மனுவில், நீட் தேர்வு என்பது CBSE பாடதிட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மாணர்களுக்கு இத்தகைய தேர்வானது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மாநில பாடதிட்டத்தில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களால் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க இயலாத நிலை உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் நன்கொடை வசூலிப்பதைத் தடுக்கவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டது. அதே நேரத்தில் அரசுக் கல்லூரிகளில் கட்டண கொள்ளை, முறைகேடு இல்லை. அப்படியான நிலையில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு என்பது பொருத்தம் இல்லாதது என்ற வாதத்தையும் அம்மனு விளக்கியது. நீட் தேர்வு என்பது மாநில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடிய மாநில அரசுகளின் அதிகாரத்தை கபளீகரம் செய்துவிட்டது; கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானதாகவே நீட் இருக்கிறது. கல்வி துறை மீதான மாநிலங்களின் சுயாட்சி அதிகாரத்தை பறிக்கிறது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சமத்துவத்துக்கும் எதிரானது எனவும் புதிய மனுவில் தமிழ்நாடு அரசு ஆணித்தரமாக கூறியிருந்தது.

தற்போது இப்புதிய மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் விரைவில் இதன் மீது விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மனுவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறவும் அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

வாபஸ் பெற்றதும் புதிய மனுவும் ஏன்?

நீட் தேர்வுக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியானது ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. பொதுவாக கொள்கைக முடிவுகளுக்கு எதிராக ஒரிஜனல் சூட் மனுதான் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆகையால் தமிழ்நாடு அரசு அண்மையில் ஒரிஜனல் சூட் மனுவைத் தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையின் போது, நீதிபதி அஜய் ரஸ்தோகியும் ரிட் மனுவை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? என தமிழ்நாடு அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார். முந்தைய அரசு ரிட் மனுவைத் தாக்கல் செய்துவிட்டது; அதனால் அதனை வாபஸ் பெறுகிறோம்; ஒரிஜனல் சூட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று முந்தைய அதிமுக ஆட்சிக் கால ரிட் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி அனுமதி வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+