நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியவே முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
டெல்லி: நீட் முறைகேடுகள் நாடு முழுவதும் நடைபெற்றது என்பதற்கு போதுமான தரவுகள் தரப்படவில்லை; நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை; ஆகையால் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் நீட் மறுதேர்வால் பல லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்; நீட் முறைகேடு மூலம் மாணவர்கள் சேர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ந் தேதி நடைபெற்றது. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாகின.

நீட் நுழைவுத் தேர்வின் போதே வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் விஸ்வரூபமாக வெளியாகின. இதனையடுத்து பலரும் கைது செய்யப்பட்டனர். நாட்டின் பல பகுதிகளிலும் நீட் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டே இருந்ததால் பெரும் சர்ச்சையானது.
நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. நாடு முழுவதும் மாணவர்கள் வரலாறு காணாத பெரும் போராட்டத்தை நடத்தினர். பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.
மேலும் நீட் தேர்வை நடத்திய தேசியத் தேர்வு முகமை தலைவர் நீக்கப்பட்டார். நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
இதனிடையே நீட் முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற விசாரணையிலும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது. இதனையடுத்து நீட் முடிவுகளை நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த முடிவுகள் மூலமாக முறைகேடுகள் மேலும் உறுதி செய்யப்பட்டன.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று நீட் முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீட் முறைகேடுகள் நாடு முழுவதும் நடைபெற்றது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. நீட் தேர்வையே ரத்து செய்து மறுதேர்வு நடத்தினால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். நீட் முறைகேடுகள் மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பது உறுதியானால் பின்னர் நடவடிக்கை எடுக்கலாம். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கும் போதுமான தரவுகளும் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications